ஈழத்தினை ஈழத்திற்குள் வாழ்ந்த ஈழத்தவன் சொல்ல கேட்கும் நாவல் நடுகல். காதலித்து கரம் பிடித்த கணவன் விட்டுச்சென்ற பெண்ணொருத்தியும் அவளது மூன்று குழந்தைகளும் விடுதலைப்போரும் சூழ்ந்த வாழ்க்கையை விவரிக்கிறது நாவல்.
அந்த தாயின் இரண்டாவது மகன் வினோதன் கதையின் நாயகன். ஒரு அம்மா, ஒரு அண்ணன் , ஒரு தங்கை என அவன் வளர வளர முப்பதாண்டுகால விடுதலை போரும் வளர்கிறது
ஒருநாள் விளையாட போன விநோதன் திரும்பி வந்து எல்லோருக்கும் அப்பா இருக்காங்க என்னோட அப்பா எங்கம்மா என்று கேட்கும் போது.. பதில் சொல்ல கண்ணீர்வடிக்கும் தாயின் காட்சியிலிருந்து தொடங்குகிறது சோகம்.
எப்போதுமே இயக்கத்தினை பத்தி பேசும் அண்ணன். பத்து வயதிலிருந்து ஐஞ்சாறு முறை இயக்கத்திற்கு ஓடிவிடும் அண்ணனை தேடிபிடித்து அம்மா அழுதுகொண்டே போய் மீட்டுகொண்டுவர அப்பாவை பிரிந்த விநோதனுக்கு அண்ணனை இழப்போமா என்ற பயம் எப்போதும் உள்ளூர இருக்க ஒருநாள் அவன் நினைத்ததுபோல் ஓடிசென்ற அண்ணன் திரும்பி வரவேயில்லை.
அப்பாவையும் அண்ணனையும் பிரிந்த விநோதனின் குடும்பத்தில் அடுத்த புயல் போர் வடிவில் வருகிறது. போருக்காக இடம்பெயர வேண்டிய சூழ்நிலை. அப்பா அண்ணன் வீடு என்ற வரிசையில் இடம்பெயரும் வேளையில் அம்மாவையும் தங்கையையும் தொலைத்துவிடும் சிறுவன் விநோதனின் தவிப்பு நம்மையும் தவிக்க செய்கிறது.
முருகன் கோயில் செல்லும் வழியில் தொலைத்த அம்மாவையும், தங்கையையும்.. முள்ளிவாய்க்கால் முள்வேலி முகாம்களிலும் தேடி அலைய நீள்கிறது நாவல்.
விநோதன் அம்மா, தங்கையோடு மீண்டும் சேர்ந்தானா, இயக்கத்திற்கு போன அண்ணன் திரும்பி வந்தானா, விட்டுபோன அப்பாவை மீண்டும் சந்தித்தானா, அவர்கள் மீண்டும் தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்தார்களா என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது நாவல்.
1989 லிருந்து 2009 வரை 20 ஆண்டுகள் ஈழம் நாவலின் 200 பக்கங்களில் கண்முன் விரிகிறது. இடையே நடக்கும் நிகழ்வுகளாக நகர்கிறது நாவல்.
அம்மாவுக்கு தெரியாமல் சொந்த வீட்டிற்கு புகைப்படத்தை மீட்கும் ஆசைகாட்டி விநோதனை கூட்டி செல்லும் அண்ணன் திரும்பும் வழியில் விமானங்கள் சூழ்ந்து செல்களை எறிய கையில் ஏந்திய கற்களை எறிந்து விமானங்களை விரட்டிவிட்டதாக தம்பியை நம்பவைக்க.. நீயா விரட்டுன என்று கேட்கும் விநோதனின் குறும்பில் நாமும் சிரிக்கிறோம்.. மயிரிழையில் அவர்கள் உயிர் தப்பியதை மறந்து.
எல்லைவரை வரும் நாய் குட்டி அதற்குமேல் வராமல் வீட்டை நோக்கி தனித்து ஓடுவது. ஆறறிவு உள்ள மனிதர்கள் எளிதில் தம் நிலங்களை பிரிந்து விடுகின்றனர். மனிதர்களை பிரிய துணியும் நாய் மண்ணை பிரிய சம்மதிப்பதில்லை என்பதை உணரும் தருணம் சிலிர்த்தேன்.
நிலம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் என ஒவ்வொரு உயிரினத்துக்கும் உரியதுதானே. போர் நிலத்தில் கிளி, மைனா, புறா, நாய், மாடு என பல உயிர்களின் பரிதவிப்பை அவைகளின் உணர்வை ஆங்காங்கே பதிவு செய்துகொண்டே நகர்கிறது நாவல்.
ஒரு இடத்தில் போர் நிகழ்ந்தால் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர் வீட்டிற்கு நகர, அங்கே உபசரிப்பு கிடைக்க.. அங்கேயும் போர் வர.. எல்லோரையும் கூட்டிக்கொண்டு அவர் அவருக்கு தெரிந்தவர் வீட்டிற்கு செல்ல என, நகரும் துயர் வாழ்க்கையில் ஆதரவு மனங்களுக்கு மட்டும் குறைவில்லை.
இறுதி போருக்கு பின் நிகழும் சோகங்களையும பதிவு செய்ய தவறாத நாவல் போருக்கு பிந்தைய அரசியலையும் இடையிடையே பேசுகிறது. நடுகல் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சங்களிலும் நடப்பட்ட கல்.
-தமிழ்வேள், டுபாய்
பிரசுரம் - புதிய தலைமுறை