தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

நடுகல்- ஒரு தலைமுறையின் பயணம்



ஒரு இன விடுதலைக்கான நெடும் போராட்டம் தன் வரலாற்றைச் சரியாகப் பதிவுசெய்வதன் வழியாகவே, வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டுத் தன் இலட்சியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முற்படுகிறது. அத்தகைய யுத்தத்தில், இன அழிப்பை தீர்வாகக் கொண்ட தரப்பு வலிமை பெறும்போது, அது தான் நிகழ்த்தும் கொடூரங்களை சாட்சியங்கள் இல்லாமல் அடுத்த தலைமுறையிடமிருந்து மறைப்பதன் வழியாகவே அந்த இன விடுதலைக்கான வேட்கையை முடக்க முயற்சி செய்கிறது. இப்படியானதொரு இன அழிப்பை, அடையாள அழிப்பை, யுத்தத்தின் விளைவுகளை, விடுதலைக்கான வேட்கையை, இயலாமையை, இழப்புகளை ஒரு தலைமுறையின் பயணத்தின் வழியே பதிவுசெய்கிறது நடுகல்.

ஒரு தரப்பின் நியாயங்களைப் பதிவு செய்வதை விட அந்த தரப்பின் மனித உணர்வுகளையும், அவர்களின் விருப்பங்கள், தேவைகள், ஒரு யுத்தம் இயல்பு வாழ்க்கையிலிருந்து அவர்களை எப்படி கிழித்துத் தூர வீசுகிறது என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்கிறது இந்த நாவல்.

“உங்களை எல்லாம் விட்டிட்டு வந்தது எனக்கும் கவலைதான். ஆனால் எங்கடை மண்ணை எதிரியிட்டை இருந்து மீட்கவும் நீங்கள் எல்லாம் சந்தோஷமாக வாழவுமே நான் இயக்கத்திற்கு வந்தேன்” எனக் கடிதம் எழுதும் வெள்ளையன்.

“நிமிர்வோடும் பெருமிதத்தோடும் வாழ்ந்த இடத்தில், அடிமையைப்போல வாய்மூடி மௌனமாக நிற்க, மனம் குமுறிது. தேகம் எரிந்தது” என்று ஆர்மி கேம்பில் வியர்த்து வழிந்து நிற்கும் வினோதன்.

“எங்கடை பிள்ளயளின்ரை நினைவுகளுக்கு நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களாலை அவங்களை அழிக்கேலாது...” என்றவாறு இராணுவத்தை நோக்கி மண்ணைவாரி வீசும் அம்மா.

“எனக்குக் கொள்ளிவைக்கிறதுக்கு என்ரை பிள்ளையைத் தாங்கோ” என்று போராட்டங்கள் தோறும் கத்திக் குரலெழுப்பும் ருக்மணி.

கொத்துக் குண்டுகளுக்கு பலியாகும் மாடுகள். இடம் பெயரும் இடங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கட்டப்படும் வடிவான வீடுகள். வீட்டின் சுவர்களில் கரிக்கட்டையால் வரையப்பட்டிருக்கும் அடையாளம் அழிக்கப்பட்ட மாவீரர்களின் படங்கள்.

இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் ஈழம். நாவலின் சார்புத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நிலையிழந்து தவிக்கும் ஒரு வரலாற்றின் அழுத்தமான அடையாளமாக நிற்கிறது நடுகல்.



-செந்தில்குமார் நடராஜன். சிங்கப்பூர்