ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவல் விமர்சனத்தின் ஒரு பகுதி இன்றைய தமிழ் இந்துவில் வெளிவந்தது. முழு விமர்சனம் மானுடம் இதழில் வெளிவந்தது.
1990 களின் தொடக்கத்திலிருந்து, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய, முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது நாவல். இக்காலகட்டமே ஈழ மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை தங்கள் சொந்த நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்த காலம், ஏதிலிகளாய் உலகெங்கும் ஈழத்தமிழர்களை அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம், உலக மக்கள் தங்கள் மனசாட்சியைக் கொன்றொழித்த காலம், ஈழமக்கள் இன்னமும் அடிமைகளாய் உலவிக் கொண்டிருக்கும் காலம். இக்காலத்தினூடே புகழ்பெற்று விளங்கிய புலிகளின் நிர்வாகத் திறமையை, தாய் நாட்டிற்காக புலிகள் இயக்கம் நடத்திய போரின் துன்பங்களை, ஈழத்தின் இயற்கை வளத்தை, தாய்மண்ணின் பண்பாட்டுக் கலாச்சாரத்தை நாவல் தேவையான அளவுக்கு பேசிச் செல்கிறது.
யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில், கொடும் துன்பத்தை அனுபவித்த ஈழத் தமிழ்மக்களின் ஆழ்மனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உளவியில் கூறுகளை நாவல் வெளிக்கொணர்கிறது. தமிழ் இன அழிப்பின் தன்மையை உலகம் இதுவரை கண்டிருக்கவில்லை. பாதுகாப்பு வளையங்களினுள் மக்களை வரச்செய்து, அவர்கள் மேல் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதல்கள், தமிழ் மக்களின் நம்பிக்கைத் தன்மையை அடியோடு குலைத்துப் போட்டுவிட்ட கொடுமை வேறு எங்கும் நடக்காதது. போராளிகளை அழித்துவிட்டோம் என்று கும்மாளமிட்ட சிங்கள ராணுவம், போராளிகளின் பிம்பங்களை, நிழற்படங்களைக் கண்டு அஞ்சுகிறது. தமிழ் இனத்தை பிரதிபலிக்கும் எதுவுமே இலங்கையில் இருக்கக்கூடாது என்ற எண்ணமே, சிங்கள ராணுவத்தின் ஒவ்வொரு அணுவையும் நிரப்பியிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்த 2009 முதற்கொண்டு, ஈழமக்களின் வாழ்வே தன் வாழ்வாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு வருபவர் ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன். போரின் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் அதிர்ச்சிகளை துன்பியல் கவிதைகளாக்கித் தந்திருப்பவர் தீபச்செல்வன். போர் குறித்த அவரது கவிதை வரிகள் புகழ்பெற்றவை. முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகான சூழலில் தீபச்செல்வனிடம் தோன்றிய மனவெழுச்சிகளை கடந்த காலங்களின் அவருடைய படைப்புகளின் வழி உணரமுடியும். போரினால் துயருற்ற மக்களின் நடுவே காத்திரமான தேடுதலை மேற்கொண்டிருக்கும் அவர், தன் உளவியல் போராட்டத்தினை எழுத்துகளின் வழியே கொண்டுவருவதில் தவறுவதில்லை. அவருடைய எழுத்துகள் உலக மக்களின் மனசாட்சியைத் தாக்கி நியாயம் கோருபவை. ஆனால் அந்த நியாயம் இன்னமும் உலக சமுதாயத்தால் வழங்கப்படவில்லை.
நாவலின் நாயகனாக விநோதனையோ அல்லது மாவீரனாகிப் போன அவனுடைய அண்ணன் வெள்ளையனையோ குறிப்பிடலாம். ஆனால் வெள்ளையனின் புகைப்படமே அசல் நாயகன். வெள்ளையனின் நினைவாக வீட்டில் இருந்த சில புகைப்படங்களும் கூட முள்ளிவாய்க்கால் போரின்போது அழிந்துபோகிறது. அந்தப் புகைப்படத்தின் தொலைதலும், அழிதலும், அது குறித்த தேடுதல் நினைவுகளும் விநோதனுக்கும், அவன் தாய்க்கும், அவன் தங்கைக்கும் தாங்கவொண்ணா சித்திரவதையைத் தருகிறது. முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடங்கும் வரை கூட, அப்புகைப்படத்தை பத்திரமாக சேமித்து வைத்திருந்த தாய், யுத்தத்திற்குப் பின்னர், இடப்பெயர்வுகளின் வலிகளோடு முள்வேலி முகாம்களில் தனது மகளோடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும்போது, மகன் வெள்ளையனின் புகைப்படத்துக்காக ஏங்கித் தவிப்பது ஒரு காவியமே. வெள்ளையனின் புகைப்படம் மட்டுமல்ல, வேறு எந்த மாவீரரின் புகைப்படத்தையும் ஈழ மக்கள் வணங்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை சிங்கள ராணுவம் கொண்டிருக்கிறது. புலிகளின் மீதான பயத்தினால்தான் முள்ளிவாய்க்கால் போரை அவர்கள் இந்தியாவோடும், பாகிஸ்தானோடும், சீனாவோடும், அமெரிக்காவோடும், இன்ன பிற சர்வதேச நாடுகளோடும் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தினார்கள்.
இனவாத சிங்கள அரசு உலக நாடுகளின் உதவியுடன், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உதவியுடன், முள்ளிவாய்க்காலில் நடத்திக் காட்டிய ஊழித் தாண்டவம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நினைவுகளிலிருந்து இன்னமும் அகல மறுக்கிறது. யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில், கொடும் துன்பத்தை அனுபவித்த ஈழத் தமிழ்மக்களின் ஆழ்மனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உளவியில் கூறுகளை நாவல் வெளிக்கொணர்கிறது. இந்த இன அழிப்பின் தன்மை உலகம் இதுவரை கண்டிராதது. பாதுகாப்பு வளையங்களினுள் மக்களை வரச்செய்து, அவர்கள் மேல் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதல்கள், தமிழ் மக்களின் நம்பிக்கைத் தன்மையை அடியோடு குலைத்துப் போட்டுவிட்ட கொடுமை வேறு எங்கும் நடக்காதது. போராளிகளை அழித்துவிட்டோம் என்று கும்மாளமிட்ட சிங்கள ராணுவம், போராளிகளின் பிம்பங்களை, நிழற்படங்களை கண்டு அஞ்சுகிறது. தமிழ் இனத்தை பிரதிபலிக்கும் எதுவுமே இலங்கையில் இருக்கக்கூடாது என்ற எண்ணமே, சிங்கள ராணுவத்தின் ஒவ்வொரு அணுவையும் நிரப்பியிருக்கிறது.
அமெரிக்காவின் 9/11 நிகழ்வுக்குப் பிறகு, கடந்த இருபது ஆண்டுகளில், உலகில் இன அழிப்புக்கு உள்ளான மக்களின் கோருதல்கள் அனைத்தும், உலகின் ஒரே அதிகார மையமாக உருவெடுத்திருக்கும் அமெரிக்க அரசை கிஞ்சித்தும் அசைத்துப் பார்க்கமுடியவில்லை. இம்மக்களின் துயரை விட, அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமல்ல, சீனா போன்ற சோசலிச நாடுகள் வகையறாக்களும், ரஷ்யா, இந்தியா போன்ற ஜனநாயக வகையறாக்களும் தங்கள் தங்கள் புவிசார் அரசியலையே முதன்மைப்படுத்தி இயங்கி வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் இன அழிப்புக்கு ஆளான ஈழ மக்கள், தங்களின் அனைத்து உரிமைகளையும் பெற சர்வதேசத்தை தொடர்ந்து நாடும் முயற்சிகளில் இன்னமும் ஈடுபடுவது ஒன்றேதான் வழியாக இருக்கமுடியும். புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்களின் சார்ப்பில் முன்னெடுக்கப்படும் இப்படிப்பட்ட சர்வதேச முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, உள்ளூர அளவில் சிங்கள ராணுவத்தை, சிங்கள மேலாதிக்கத்தை ஆயத உதவியோடு அல்லாமல், சாத்வீக முயற்சிகளில் வழி முறியடிப்பதற்கும், தவறுகளை தட்டிக் கேட்பதற்கும் கிடைத்திருக்கக் கூடிய வலிமை வாய்ந்த நபராக தீபச்செல்வன் இருக்கிறார் என்று உறுதிபடச் சொல்லமுடியும். தீபச்செல்வனை, அவருடைய குடும்பத்தை அறிந்துகொண்டிருப்பவர்கள் இந்நாவலை எளிதில் உள்வாங்கிக் கொள்ளமுடியும்.
போராளிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் மறைந்துபோன பிறகும், பல்லாயிரக்கணக்கான போராளிகளை குற்றுயிராகப் பிடித்து நலன்புரி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட பிறகும், பல நூற்றுக் கணக்கான போராளிகளை காணாமலடித்துவிட்ட பின்னரும்கூட சீருடை தரித்த போராளிகளின் புகைப்படங்களைக் காண சிங்கள ராணுவம் அஞ்சுகிறது. தாய் மண்ணுக்காகப் போராடிய புலிகளின் உடலங்கள் சிதைக்கும், மண்ணுக்கும் கொடுக்கப்பட்டு விட்ட நிலையிலும், இன்னமும் 'புலிகள்' என்னும் சொற்களுக்காக மிரளுகிறது சிங்கள ராணுவம். மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்படுகின்றன. மாவீரர் தினம் அனுசரிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மாவீரர்களாகிப் போன தங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகளது கல்லறைத் தோட்டங்களை வரிசைக் கிரமமாக அடையாளப்படுத்தி, கண்ணியப்படுத்தி, ஆண்டிற்கு மூன்று முறை மரியாதை செலுத்தி வரும் ஈழ மக்கள், மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது அதைக் கடுமையாக மீறிய, ஈழத்தின் சமீபத்திய நினைவுகளை நாவல் வெளிப்படுத்துகிறது. மாவீரர் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கி, அதன் மேல் சிங்கள ராணுவத்தினர் விளையாடும் மைதானமாக உருமாற்றியதை, சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களின் மீது நடத்தும் ஒரு உளவியல் யுத்தமாகவே பார்க்கமுடியும்.
போராளிகள் தங்களது கட்டமைப்புகளை தாறுமாறாக உருவாக்கிக் கொள்ளவில்லை. போர் நடந்து கொண்டிருக்கும்போதும் சரி, அமைதி காலத்திலும் சரி அவர்கள் ஒரு மிகச்சரியான அரசு நிர்வாகத்தை வழிநடத்தினார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளமுடியும். போரின் அவசரகதியிலும் கூட, அப்போர் எளிய மக்களை கடுமையாகப் பாதித்துவிடக் கூடாது என்ற அக்கறை போராளிகளுக்கு இருந்தது. இந்த அக்கறை பயிற்சியினால் கிடைத்ததாகக் கொண்டாலும், அவர்களின் ஆழ்மனத்தில் உருவாகி இருக்கும் உயர்மதிப்பீடுகளின் விளைவே இது. போர் நடக்கப் போகும் இடத்தில் வயதானவர்களின், பெண்களின் வீடுகளைப் பிரித்து, அப்படியே வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது. குடிபெயரும் இடங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது. இவை அனைத்தும் போராளிகளின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. போரில் இறந்துபோகும் போராளிகளின் உடல்களை, மேலும் தங்களுக்கு இழப்பு ஏற்படும் பட்சத்திலும் அதற்கும் துணிந்து, எதிரிகளின் இடத்திலிருந்து பத்திரமாக மீட்டு வருவது, இறந்தவர்களின் உடல்களை போராளிகளின் இல்லங்களுக்கு அனுப்பி வைத்து குடும்பத்தினரை இறுதி மரியாதை செய்ய வைப்பது, மீண்டும் அவ்வுடல்களை மாவீரர் துயிலும் இடங்களில் வரிசைப்படுத்தி அடக்கம் செய்து, மாவீரர்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகளை நடுவது. போராளிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொள்ளும் சிங்கள ராணுவ வீரர்களின் உடல்களை சிங்கள அரசு வாங்க மறுக்கும் சூழல் இருந்த அக்காலங்களில் மாவீரர்களுக்கு கிடைத்த மரியாதை உண்மையில் உயர்வானது, அற்புதமானது, மரியாதைக்குரியது. தங்கள் ராணுவ வீரர்களின் உடல்களைக் கூட வாங்க மறுத்து, பலி எண்ணிக்கையை குறைத்து சொன்ன சிங்கள ராணுவம்தான் இன்று மாவீரர் கல்லறைகளை சேதப்படுத்துகிறது. அக்கல்லறைகளை விளையாட்டுத் திடல்களாக மாற்றிவருகிறது. இதைவிட இனவெறி பிடித்த, வக்கிரம் பிடித்த ஒரு ராணுவத்தினர் வேறு எங்கும் இருந்திருக்க முடியாது, இனியும் இருக்கவும் முடியாது.
விநோதனுக்கும் அவன் அண்ணன் வெள்ளையனுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை, தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் வீழ்த்தியது. பத்து வயது முதல், போராளியாவதற்காக வெள்ளையன் எடுக்கும் முயற்சிகள் இயக்கத்தால் தடுக்கப்பட்டு விடுகிறது. முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை, சிறுவர்களை ஆயதபாணியாக்கும் முயற்சிகளை ஈழப் போராட்டத்தின் வரலாற்றில் எங்கிருந்தும் நீங்கள் எடுத்து விடமுடியாது. ஆனால் முள்ளிவாய்க்கால் போர், புலிகளின் இறுதிக்கட்டத்தை நிர்ணயித்ததோடல்லாமல், புலிகளின் அறம் சார்ந்த நடவடிக்கைகளிலும் பெரும் வழுவலை ஏற்படுத்தியது. நேர்மை தவறிய சிங்கள ராணுவ வெறிக்கு எதிராக அறம் மண்டியிட்டுக் கதறியழுதபோது, தூவானமாய் வீசிய கிபீர் விமானக் குண்டுகள் சமாதான வளையத்தை நாசம் செய்வித்து, ஈழ மக்களின் ரத்த ஆற்றை வற்றாமல் ஓடச்செய்தது.
தேசியம், நாடு, மொழி, தேசிய இனம் என்பதெல்லாம் கெட்ட வார்த்தைகளா என்ன? உலகின் நாடுகள் அனைத்தும் எல்லை மாறா பத்தினிகளாவே இருந்துவிட முடியுமா? உலக அரசியலை ஆளும் கோட்பாடுகள் அனைத்தும் மாறாதவைகளா என்ன? அடக்கி ஒடுக்கப்பட்டு வாழும் மக்கள் வெடித்தெழுவது தவறு என எந்த மதம் சொல்கிறது? தேசிய இன உரிமைப் போராட்டங்களை, பயங்கரவாதங்கள் என யார் முடிவு செய்வது? உலகின் மனசாட்சி கேலிக்கூத்தாகிப் போனதை என்று சரி செய்யப் போகிறோம்?
வெள்ளையனைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூருவதற்கு அவர்களின் புகைப்படங்களோ, மாவீரர் துயிலும் இல்லங்களோ இன்று இல்லை. தங்களுக்குப் பிரியமான கற்களையோ, மரங்களையோதான் ஈழமக்கள், மாவீரர் நினைவாக வழிபடுகிறார்கள். அதையும்கூட மோப்பம் பிடித்து உடைத்தெறிய சிங்கள ராணுவம் தயாராக இருக்கிறது. ஏனென்றால் ஈழம் இப்போது சிங்கள தேசமாம். ஈழத்தின் மனசாட்சியே இந்த நடுகல்.
நன்றி - மானுடம் ஜூன் 2019
நன்றி - மானுடம் ஜூன் 2019
செ. சண்முகசுந்தரம், அரை நூற்றாண்டுகளின் கொடும் கனவு என்ற நூலை எழுதியவர்.