தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

திங்கள், 22 ஏப்ரல், 2019

நடுகல்: நினைவுகளை இழப்பதற்கில்லை! தமிழ் இந்து



Published :  20 Apr 2019  11:09 IST



தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல்.
போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் கொடூரங்களைத் துன்பியல் கவிதைகளாக்கியிருப்பவர் தீபச்செல்வன். போர் குறித்த அவரது கவிதைகள் தமிழ்ச் சூழலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான சூழலில் தீபச்செல்வனிடம் தோன்றிய மனவெழுச்சிகளையே அவரது படைப்புகளின் வழி உணர முடிகிறது. அவரது எழுத்துகள் வாசகர்களின் மனசாட்சியைத் தொட்டுக் கேள்வி எழுப்பி நியாயம் கோருபவை.

நாவலின் நாயகர்களாக விநோதனையும், மாவீரனாகிப்போன அவனது அண்ணன் வெள்ளையனையும் குறிப்பிடலாம். ஆனாலும், வெள்ளையனின் புகைப்படம்தான் அசல் நாயகன். வெள்ளையனின் நினைவாக வீட்டில் இருந்த சில புகைப்படங்களும்கூட‌ முள்ளிவாய்க்கால் போரின்போது அழிந்துபோகின்றன. அந்தப் புகைப்படங்களின் தொலைதலும் அழிதலும், அது குறித்த தேடல் நினைவுகளும், விநோதனுக்கும் அவன் தாய்க்கும் அவன் தங்கைக்கும் தாங்கவொண்ணா சித்திரவதையைத் தருகின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடங்கும் வரைகூட அப்புகைப்படங்களைப் பத்திரமாக சேமித்துவைத்திருந்த தாய், யுத்தத்துக்குப் பின்னர், இடப்பெயர்வுகளின் வலிகளோடு முள்வேலி முகாம்களில் தனது மகளோடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும்போது தன் மகன் வெள்ளையனின் புகைப்படத்துக்காக ஏங்கித் தவிப்பது ஒரு துயரக் காவியம்!
போராளிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் மறைந்துபோன பிறகும், பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் குற்றுயிராகப் பிடித்து ‘நலன்புரி’ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்ட பிறகும், பல நூற்றுக்கணக்கான போராளிகளைக் காணாமலடித்துவிட்ட பிறகும் சீருடை தரித்த போராளிகளின் புகைப்படங்களைக் காண சிங்கள ராணுவம் அஞ்சுகிறது. தாய்மண்ணுக்காகப் போராடிய புலிகளின் உடல்கள் சிதைக்கும், மண்ணுக்கும் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையிலும், ‘புலிகள்’ என்னும் சொல்லுக்காக‌ மிரளுகிறது. மாவீரர் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்படுகின்றன.
மாவீரர் தினம் அனுசரிப்பதற்குத் தடைவிதிக்கப்படுகிறது. மாவீரர்களாகிப்போன தங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகளது கல்லறைத் தோட்டங்களை வரிசைக்கிரமமாக அடையாளப்படுத்தி, ஆண்டுக்கு மூன்று முறை மரியாதை செலுத்திவருகிறார்கள் ஈழ மக்கள். மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டபோது அதைக் கடுமையாக மீறிய‌, ஈழத்தின் சமீபத்திய‌ நினைவுகளை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. மாவீரர் துயிலும் இல்லங்களைத் தரைமட்டமாக்கி, விளையாட்டு மைதானமாக உருமாற்றியதை, சிங்கள அரசாங்கம் நடத்திய ஒரு உளவியல் யுத்தமாகவே பார்க்க முடியும்.
விநோதனுக்கும் அவன் அண்ணன் வெள்ளையனுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தைத் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் வீழ்த்தியது. பத்து வயது முதல் போராளியாவதற்காக வெள்ளையன் எடுக்கும் முயற்சிகள் இயக்கத்தால் தடைப்பட்டுவிடுகின்றன.
முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை சிறுவர்களை ஆயதபாணியாக்கும் முயற்சிகளை ஈழப் போராட்டத்தின் வரலாற்றில் எங்கிருந்தும் நீங்கள் எடுத்துவிட முடியாது. ஆனால், முள்ளிவாய்க்கால் போர், புலிகளின் இறுதிக்கட்டத்தை நிர்ணயித்ததோடு அல்லாமல், புலிகளின் அறம் சார்ந்த நடவடிக்கைகளிலும் பெரும் வழுவலை ஏற்படுத்தியது. நேர்மை தவறிய சிங்கள ராணுவ வெறிக்கு எதிராக அறம் மண்டியிட்டுக் கதறியழுதபோது, தூவானமாய் வீசிய கிபீர் விமானக் குண்டுகள் சமாதான வளையத்தை நாசம் செய்வித்து, ஈழ மக்களின் ரத்த ஆற்றை வற்றாமல் ஓடச்செய்தது.
வெள்ளையனைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூருவதற்கு அவர்களின் புகைப்படங்களோ, மாவீரர் துயிலும் இல்லங்களோ இன்று இல்லை. தங்களுக்குப் பிரியமான கற்களையோ மரங்களையோதான் ஈழமக்கள் மாவீரர் நினைவாக வழிபடுகிறார்கள். நடுகற்களையும்கூட உடைத்தெறிய உளவுபார்க்கின்றன ராணுவச் சீருடைகள்.
- செ.சண்முகசுந்தரம், தொடர்புக்கு: c.shanmughasundaram@gmail.com

நன்றி - தமிழ் இந்து 20 ஏப்ரல் 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக