தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

வியாழன், 11 ஜூலை, 2019

நடுகல் - கனிமொழி கடிதம்



மதிப்பிற்குரிய தீபச்செல்வன் அவர்களுக்கு,

தங்களது நடுகல் நாவலை வாசித்து முடித்ததும் இனம் புரியாத கனத்த உணர்வு என்னை ஆட்கொண்டது. வாழ்க்கையே போராட்டமாக கொண்ட ஒரு இனத்தின் தோல்வியை இன அழித்தொழிப்பை ஏற்க முடியாத விரக்தியாக இருக்கலாம். போருக்கு பின்னான போரைப் பற்றிய மிக முக்கியமானதொரு வரலாற்று பதிவு நடுகல். இந்நாவல் மூலம் சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. சில கேள்விகள் எழுந்தன.

திருடன்- போலிஸ் விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கும் இயக்கம்- ஆமி விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கும் வாழ்க்கை வேறு வேறு சூழ்நிலையை தந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகள்,போர் தின்று தீர்த்த குழந்தைகள், போர் களவாடிய குழந்தைப்பருவம் என அனைத்தையும் காட்சிபடுத்தியுள்ளீர்கள்.

இறந்த பின் ஆறடி நிலம் அனைவருக்கும் சொந்தம். எம் இனத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் தியாகத்தின் அடையாளத்தை அழித்தொழிப்பது என்பது இன அழிப்பின் உச்சம்.

ஒரு நிழற்படம் எத்தனை நினைவுகளை தந்துவிடுகிறது. இல்லாமல் போனவரின் இருப்பும் அந்த நிழற்படம் தான். வினோதன் நிழற்படங்களை தேடி அலையும் போது அது கிடைத்து விடவே பிரார்த்தது மனது.

முடிவற்ற இடம்பெயர்வு, பசி, இரவும் பகலும் பதுங்கு குழி வாழ்வு, இராணுவ முகாம் வாழ்வு மற்றும் மறுக்கப்பட்ட மாவீரர் நாள் அனுசரிப்பு என முடிவின்றி நீள்கின்ற துயரங்கள் என்னுள் திரும்ப திரும்ப எழுப்புவது ஒரு கேள்வியைத்தான். போரற்ற நிலத்தில் பிறந்திருக்க கூடாதா?

மக்களின் எண்ணிலடங்கா துயரங்களையும் மாவீரர்களின் போராட்டத்தையும் கடும் இன்னல்களுக்கு இடையே காட்சிபடுத்தியமைக்கு நன்றி.

-கனிமொழி அருணாசலம்

வெள்ளி, 5 ஜூலை, 2019

புலிகள் ஈழ சமூகத்தின் மனசாட்சி! மண்குதிரை




விநோதன் என்னும் ஒரு சிறுவன் போரில் மரித்த தன் அண்ணனின் புகைப்படத்தைத் தேடும் கதைதான் ‘நடுகல்’ எனச் சுருக்கிப் பார்க்கலாம். புகைப்படம் என்பதை ஒரு துண்டுச் சாரமாக எடுத்துக் கொண்டு இலங்கையில் நடக்கும் கலாச்சாரப் படுகொலையைச் சொல்வது ‘நடுகல்’லின் முதன்மை நோக்கம்.கவிஞர் தீபச்செல்வனின் முதல் நாவல். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.

தமிழ் மரபில் தாய்க்கு இருக்கும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக தீபன் இதில் வெள்ளையனின் தாயைப் பிரம்மாண்டமாக எழுப்பிக் காட்டியிருக்கிறார். வீட்டை விட்டுக் காதல் கணவருடன் படியிறங்கி வந்தவள். கணவன் பாராரியாய்ப் பரதேசம் போன பிறகு தனி மனுஷியாகக் குழந்தைகளை வளர்த்தவள். அவளது எளிய குடும்பத்தின் வழி ஈழத்தின் சமூக அமைப்பை தீபன் நாவலுக்குள் உருவாக்கிக் காட்டுகிறார். 

இன்னொரு புறமும் புலிகள், அந்தச் சமூகத்துக்குள் என்ன மாதிரியாகச் செயல்பட்டார்கள் என்பதையும் தீபன் சொல்கிறார். ஈழச் சமூகத்தில் அவர்கள் மனசாட்சியாகச் செயல்பட்டதாக இந்த நாவல் சித்தரிக்கிறது. பெயரளவில் கேள்விப்பட்டிருந்த தமிழிழக் காவல் துறை, தமிழீழ நீதிமன்றம் ஆகிய புலிகளின் ஆட்சி அமைப்பின் செயல்பாடுகள் நாவலுக்குள் கதையோட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன.

2009 போரைவிட ராணுவ அமைப்பாக புலிகள் மாறிய பிறகு நடத்தப்பட்ட ஆனையிரவு மீட்பு போர் குறித்துத் திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஓயாத அலைகள் மீட்பு நடவடிக்கையில் பங்குகொண்ட வீரன்தான் நாயகன். போர் முடிந்த சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வந்திருக்கும் எழுத்து இது.

சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம் போன்ற ஈழக் கவிஞர்களின் குரல் பின்னால் இலக்கியதில் தொடரவில்லை. அந்த விட்ட இடத்தில் தீபன் இப்போது தொடங்கியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

கவிஞர் என்ற நிலையில் இருந்து விவரிப்பு மொழிக்குப் பாரம் ஏற்ற தீபன் முயலவில்லை. எளிய கதையைச் சொல்வதற்குச் சிக்கல் இல்லாத மொழியை தீபன் தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்கு என்வாழ்த்துகள்

31.12.02018 அன்று சென்னையில் இடம்பெற்ற நடுகல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதன் சுருக்கம்.

-மண்குதிரை