தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

செவ்வாய், 11 ஜூன், 2019

நடுகல் நாவலுக்கு இயல் விருது!


கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டு தோறும் வழங்கும் இயல் விருது விழாவில் நடுகல் நாவலுக்கு சிறந்த புனைகதைக்கான விருதினை வழங்கியுள்ளது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பணியும், இயல் விருதின் முக்கியத்துவமும் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்தது. நடுகல் நாவல், பேரழிவு நகரத்திலிருந்து மீண்டெழ விரும்புகின்ற ஒரு குழந்தையின் மனம் உறைந்த நாவல். எனது நாவலுக்கும் இலக்கியப் பயணத்திற்கும் பெரும் அங்கீகாரமாகவும் ஊக்கமாகவும் அமையும் இவ் விருதினை அளித்துள்ள இலக்கியத் தோட்டத்திற்கு அன்புமிக்க நன்றிகள்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுக் குறிப்பிலிருந்து.
“தான் பிறந்ததில் இருந்து இலங்கையில் நிகழ்ந்து வரும் இனக் கலவரமும் அதில் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் அடைந்த இழப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய நடுகல் என்கின்ற நாவல், அதன் சுய விவரணத் தன்மை காரணமாக ஒரு முக்கியமான ஆவணமாகிறது. அத்துடன் கிளிநொச்சி என்கின்ற ஒரு நகரத்தின் இயற்கை எழில் காட்சிகளையும் இனப் போர் அந்த நகரத்தின்மீது கட்டவிழத்துவிட்ட எண்ணற்ற அழிவுகளையும் அப்பாவி மக்கள் போரில் பட்ட இழப்புக்களையும் போர் முடிந்த பின்னரும் முடியாமல் தொடரும் அம் மக்களின் துயரங்களையும் ஆவணப்படுத்திய நடுகல் நாவலுக்காக 2018ஆம் ஆண்டின் புனைவுப் பரிசை தீபச்செல்வனுக்கு வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை கொள்கிறது. ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக