தீபச்செல்வனின் நடுகல் நாவலினை வாசிக்க கிடைத்தது. கிளிநொச்சி எனும் யுத்த பிரகடன தேசத்திலிருந்து போரினை பாடிச் சென்றிருக்கிறார். முப்பது வருட காலம் இலங்கையின் சமத்துவத்தினை ஆட்டிப்படைத்த கோர நினைவுகளின் பரிதாபமாய் விரிந்து நிற்கிறது நடுகல். பிரதி எனும் வகைப்பாட்டினில் வைத்து வாசிக்க முற்படுவதா அல்லது நினைவேடாக ஊடறுப்பதா என்பதில் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது தீபாவின் சொற்கள். புனைவு வழிப்பிரதியாக சொல்லப்படுகின்ற துன்பியல் வாழ்வினை பிரச்சார தொனியுடன் கடந்து செல்கிறது படைப்பு.
விடுதலை புலிகளின் போராட்டத்தில் மடிந்து போன மக்களை பேசுவதை விடவும், போராளிகளுக்கு அதிக இடத்தினை வழங்கியிருக்கிறது நாவல். ஆயினும் போருக்கு பின்னராக மாண்டு போன உயிர் மீதான காதலை வெளிப்படுத்தும் அம்மாவின் கண்ணீரும், தம்பியின் நினைவுகளும் சோகப் பிரதியாக நடுகல்லினை நுகர வைத்திருக்கிறது.
தீபச்செல்வன் கவிதைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட செயற்பாட்டாளனாக இருப்பதால் நாவலில் மேவி வரும் வர்ணனைகள் சில இடங்களில் அலுப்படிக்கச் செய்கிறது. யுத்த சூழலினை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவந்த நாவல்களின் வருகை யாழ்ப்பாணத்து சூழலில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களின் ஆன்மா இங்கிருக்கும் போரினை அலசல் புலசலாக எழுதியதை ஜீரணித்து முழுங்கியவர்கள் ஏராளம். இந்த புள்ளியிலிருந்துதான் போராட்டம் பேசும் இலக்கியங்கள் சோம்பலை தரத் தொடங்கின.
தானே கதை சொல்லியாக தனது நினைவுகளை பகிர்வது போன்ற தோரணையில் நடுகல் வாழ்வின் துயரத்தை பாடுகிறது. யுத்தம் என்பதே துன்பியலின் அறிகுறிதான். ஆனாலும் பிரதி வடிவத்தில் சொல்கின்ற போது அதற்கான விசித்திர வடிவத்தின் செம்மைகளை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. போரில் இறந்து போன மாவீரன் ஒருவனை சுற்றி நிகழ்த்தப்படும் கதையில் பல ஜீவன்கள் உணர்வற்று மாய்ந்து போகும் பாத்திரங்களாக மாற்றம் கொள்கின்றன.
மைய கருத்தின் அடிப்படையில் ஒரு பாத்திர வார்ப்பினை இலக்காக கொண்டு ஒட்டுமொத்த யுத்த பரப்பின் சிறு புல்லினை அலசியிருக்கிறார் தீபச்செல்வன். வரலாறு எப்பொழுதும் தோதுக்கு எழுதப்படுபவை எனும் நம்பிக்கையின் மீது கட்டுடைப்பினை நிகழ்த்துகிறது நடுகல்.
போருக்கு பின்னரான காலப்பிரதிகள் கற்பனை வளத்தினை அதிகமதிகம் சேகரித்துக் கொண்டு மிதமிஞ்சிய உசுப்பலினை ஏற்படுத்தின. நடுகல் பிரதிக்கான துயரம். ஆனால் துயரத்திற்கான பிரதியில்லை.
-சஜித் அகமட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக