“நாங்கள் மெனிக்பாம் முகாமுக்கு வந்து சேரக்குள்ளை குறை உயிரோடை வந்ததைப் போலத்தான் இருந்தது. ஒருநாள் முழுக்க பஸ்ஸிலை எங்கை எங்கையோ எல்லாம் கொண்டுபோயிட்டு பிறகு கொண்டு வந்து இறக்கினாங்கள். வந்ததும் வெறும் நிலத்திலை விழுந்து கிடந்தன். அப்பிடிக் களைப்பு ”
அக்கொடிய நாட்களின் கதையை சொல்லும் அம்மாவின் முகத்தில் முடிவற்ற அலைச்சல். கந்தக நெடில். பேராறாய் குருதி. விழிகளில் லட்சம் பிணங்கள்.
“கிளிநொச்சியிலை எறிகணைகள் வந்து விழத்தொடங்கின ஒருநாளில் எங்க இடம்பெயர்ந்து போறது என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை... இரண்டு இயக்கப் பொடியள் வந்து வீட்டைக் கழட்டி வீட்டுச் சாமானுகளை எல்லாம் ரக்டரிலை ஏத்திவிட முரசுமோட்டைக்குப் போனம். அங்கையும் கன நாளில்லை. ஒருமாதந்தான் இருந்தனாங்கள். ஒருநாள் முரசு மோட்டைச் சந்தியிலை இருக்கிற செல்லையா கடைக்கு மேலை கிபிர், குண்டுகளை கொண்டு வந்து கொட்டிச்சுது. சனங்கள் எல்லாம் துடிதுடிச்சு சிதறிச் செத்துதுகள்.
அந்த இடமே இரத்த வெள்ளம்!
ஒரு பின்னேரம். இனி இஞ்சை இருக்க ஏலாது வெளிக்கிடுங்கோ எண்டு இசைப்பிரியன் வந்து சொன்னான். ருக்குமணி அவனைத் தேடிக்கொண்டு திரிஞ்சவள். உன்ரை அம்மா தேடினவள் எண்டு சொல்லுவமெண்டு பாக்க அவன் ட்ரக்கிலை ஏறி பரந்தன் பக்கமாய் போயிட்டான். கிளிநொச்சிப் பக்கம் பெரிய சண்டை நடக்கப் போகுது எண்டு விளங்கிச்சுது.
அண்டைக்கு இரவோடு இரவாய் தர்மபுரத்திற்கு இடம்பெயர்ந்தம். நெத்தலியாற்றுப் பிள்ளையாரின் அருளாலையோ என்னவோ அந்தக் கோயிலின்டை தாழ்வாரத்திலை மூண்டு மாதங்கள் இருந்தம்...
ஆனால் பிறகு எறிகணையள் அந்த இடத்தையும் விட்டுவைக்கேல்லை. அங்கயிருந்தும் துரத்தினாங்கள். செல் வந்து விழேக்கையெல்லாம் பிள்ளையார் கோயிலுக்குள்ளை இருப்பம். பிறகு பிள்ளையாருக்கு மேலையும் செல் வந்து விழுத் துவங்கிச்சுது. வானத்தை நிமிர்ந்து பாத்தால் கிபீர் விமானங்கள். அங்கயிருந்தும் இடம் பெயர்ந்தம்...
முறிகண்டியானே! இது என்ன சோதனை? துடிச்சுப்போனம்…
தர்மபுரத்திலையிருந்து சுதந்திரபுரத்துக்குப் போனம். தர்மபுரத்திலிருந்து சுதந்திரபுரத்திற்கு சைக்கிளிலை போனாலும் அரை மணித்தியாலமே கூட. ஆனால் நாங்கள் போய்ச்சேர ஒருநாள் ஆகிட்டுது. ஒவ்வொரு அடியாக வைச்சுவைச்சு நடந்தம். அப்பிடி சனநெரிசல். வானத்திலை கிபீர். செல்லுகள் பக்கத்திலை வந்து விழுகுது. எத்தனையோ பேர் ஒருத்தரை ஒருத்தர் தவறவிட்டிட்டு தேடித் துடிச்சுதுகள். பசி ஒருபக்கம். குடிக்க தண்ணிகூட இல்லை. நடக்கவும் முடியேல்லை. ஆனால் ஆமி கலைச்சுக் கலைச்சு செல் அடிச்சுக்கொண்டே இருந்தான்..”
தொடர்ந்து பேச முடியாமல் கத்தியழுதாள் அம்மா.
“என்னாலை அதுக்குள்ளை ஒரு அடிகூட எடுத்து வைச்சு நடக்க முடியேல்லை அண்ணா” கண்களை துடைத்து, தொடர்ந்தாள் தங்கச்சி.
“சுதந்திரபுரத்திலை இருந்த நாட்கள் முழுதும் பங்கரிலைதான் எங்கடை வாழ்க்கை. வெளியிலை தலைகாட்ட ஏலாது. ஒரு கிழமைக்கும் மேலை தொடர்ந்து பங்கருக்குள்ளையே இருந்தம். வானத்தைப் பார்க்கேல்லை. இரவு, பகல் தெரியாது. ஒரு பக்கம் இடப்பெயர்வு. மற்றப் பக்கம் சனம் செத்து விழுகுதுகள். ஆர் செத்தது? ஆர் இருக்கிறது எண்டு தெரியாது..
சனங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகுதுகள். பங்கர் எல்லாம் சவக்குழி ஆகிட்டுது. அந்த மரணக் குழியளிலை பதுங்கிடந்தம். ஒரு தறப்பாள் கொட்டில்தான் கொஸ்பிட்டல். அங்கை ஈழப்பிரியன் அண்ணாதான் காயப்பட்ட சனங்களுக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்தார்.
சண்டை நிண்ட பாடில்லை…
நல்ல நினைவிருக்குது. அண்டைக்கு மாசி நாலாம் திகதி 2009ஆம் ஆண்டு. அண்டைக்குத்தான் இலங்கையின்டை சுதந்திரதினமாம். வழமையைவிட அண்டைக்குத்தான் செல்லடி கூடவாயிருந்தது. அண்டைக்குத்தான் நிறையச் சனங்கள் கொல்லப்பட்டதுகள்.
அப்பிடிக் குண்டு மழை பொழிஞ்சாங்கள் அண்ணா...
அண்டைக்குத்தான் ஜீவா அண்ணையும் அவரின்டை மனுசியும் மூண்டுபிள்ளைகளும் ஒரு செல்லிலை ஒரு நொடியிலை அந்த இடத்திலையே செத்தவை. விமலன் அண்ணை காயப்பட்டு இரத்தம் கொட்டக் கொட்ட இரண்டு பிள்ளையளை தூக்கிக்கொண்டு ஓடினார். கிளி அக்கா எங்களுக்குப் பக்கத்தில் பங்கரை விட்டு வெளியிலை வந்து கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தவா.. ஒரு செல் வந்து அவாவுக்கு மேலை விழுந்துது. அந்த பங்கர், எங்கடை பங்கர் எல்லாம் சதையும் இரத்தமும். அவான்டை பிள்ளையள் துடிச்சுதுகள். அப்பிடி எத்தினை பேர் சாகிறதை இந்தக் கண்ணாலை பாத்தனான் அண்ணா?
மறக்க ஏலாத கொடுமையள் அண்ணா!
பசிச்சழுத பிள்ளையளுக்காக ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தவையளும் குழந்தைகளுக்கு பால் ஊட்டிக் கொண்டிருந்தவையளும் எண்டு எத்தனை பேர் செத்திச்சினம்? எப்ப சாவுவரும்? அடுத்து ஆர் சாகிறது எண்டு தெரியாத வாழ்க்கை. எப்ப குண்டு வரும்? எங்கயிருந்து குண்டு வரும் எண்டு தெரியாத நிலைமை.
செத்தவையளை அடக்கம் பண்ண ஆளில்லை. குறை உயிரிலை துடிக்கிற ஆக்களை தூக்கி மருந்து காட்ட ஆளில்லை.
அப்பயெல்லாம் உன்ரை குரலைக் கேக்க உன்னைப் பாக்க ஏங்குவம் அண்ணா… உனக்கு வந்து போன் எடுக்கவும் ஏலாத மாதிரி செல்லடி.. இடைகிடை குனிஞ்சு வேலிக் கரையோரமாய் நடந்து கொமினிக்கேசனுக்கு வந்து அம்மா கோல் எடுக்கிறவா.. அம்மா பத்திரமாய் திரும்புவாவோ எண்டு பங்கருக்குள்ளை கிடந்து துடிப்பன்…
அப்ப அங்க சரியான பனி. தாங்க ஏலாத குளிர். ஒரு நாள் அங்க இருந்தும் இடம்பெயர்ந்து வந்து சேரும்போது எனக்கும் அம்மாவுக்கும் வருத்தமும் வந்திட்டுது. எங்களை மாதிரி கனபேருக்கு வருத்தம். அதுக்குள்ளை எங்கை மருந்துக்குப் போறது? சுதந்திரபுரத்திலையும் இருக்க முடியேல்லை. பிறகு இரணைப்பாலையிலை மூண்டு நாள்தான் இருந்திருப்போம்.
அங்கையும் எங்களை இருக்க விட்டாங்களே?...
இரணைப்பாலையை விட்டு இரட்டைவாய்க்காலுக்கு வந்தம். இரட்டைவாய்க்கால் கடற்கரை முழுதும் இடம்பெயர்ந்த சனங்கள். அங்கையும் ஒருமாதம் தான் இருந்திருப்பம். பிறகு வலைஞர்மடத்துக்கு வந்தம். ஒரு இடத்திலை ஒரு பொழுதுகூட தங்கமுடியேல்லை. துரத்தித் துரத்தி செல்லடி. பாதுகாப்பு வலயங்களுக்குள்ளைத்தான் கூடச் செல்லடி. அதுக்குள்ளை போன திருவிழியின்டை குடும்பமே இல்லை... பரிதிநிலா சரியான காயத்தோடையும் சண்டையிலை நிண்டவள். அவள் வீரச்சாவு எண்டு அறிஞ்சு துடிச்சம். வித்துடலைத் தேடி அவளின்டை அம்மா செல்லுகளுக்கு இடையாலை ஊந்து ஊந்து அலைஞ்சதை எப்பிடி மறப்பம் அண்ணா? ஆனந்தி அக்கா ஒரு பக்கம் மனுசனை தேடித் திரிஞ்சா…
வலைஞர் மடத்தில் பார்த்ததுகளை என்னாலை ஒருக்காலும் மறக்க ஏலாது. எங்கை பாத்தாலும் சாவும் சடலங்களும்தான். ஒரே இரத்த வாடை. வலைஞர்மட ஆஸ்பத்திரி முழுக்க காயப்பட்ட ஆக்கள். காயங்கள் எல்லாம் நாறி மணக்க வெளிக்கிட்டுட்டுது. மருத்துவமனை காணிமுழுக்க செத்த சனங்கள்தான். ஒண்டுக்கு மேலை ஒண்டாய் அடுக்கிக்கிடந்தது. அய்யோ அது மருத்துவமனையா சவச்சாலையா எண்டு தெரியேல்லை... மருத்துவப் போராளியள் மருந்தில்லாமல் வெறும் துணியலை கிழிச்சுக் கிழிச்சு காயங்களுக்குக் கட்ட, இரத்தம் நிக்காமல் கொட்டிச்சுது.. அநாதையாய் செத்துக் கிடந்தா தவமணி அக்கா. செந்தூரனும் கடைசியலை இயக்கத்துக்குப் போட்டான்.
இரத்தினம் அண்ணையும் சண்டையிலை நிண்டு உதவியள் செய்தார். இரண்டு பேரும் வீரச்சாவு.
ஆருக்கு சாவு வரும்? யார் தப்புவினம் எண்டெல்லாம் ஆருக்கும் தெரியாது. உயிரை கையிலை பிடிச்சுக் கொண்டிருந்தம். எல்லாமே எல்லாருமே சாவுக்கு முன்னாலைதான்.. வலைஞர் மடத்திலையிருந்து கடைசியாய் முள்ளிவாய்க்காலுக்கு வந்தம். இதுவரைக்கும் சந்திச்சதைவிட சரியான துன்பங்கள்.. எங்கை பாத்தாலும் செத்த பிணங்கள்.. கால் வைக்கிற இடமெல்லாம் இரத்தம். தூக்கவும் பாக்கவும் அழவும் ஆக்களில்லை.. செத்தவையளை மணலாலை போட்டு சிலர் மூடிச்சினம். பெத்த தாயை இழந்து தனியா அழுகிற குழந்தை.. செத்துப்போன குழந்தையளை பாத்து துடிக்கிற தாய்.. உடம்பிலை காய் கால் இல்லாமல் துடிக்கிறவையள்…
பிணங்களை விட்டிட்டு போக ஏலாமல் கத்திற சனங்கள்.. எல்லாருக்கு மேலையும் திரும்பவும் குண்டுகள்தான்.. எல்லாரையும் திரும்பத் திரும்ப துப்பாக்கிச் சன்னங்கள் வந்து தாக்கிச்சுது… ஊழித்தீயாய் சண்டை. ஈழப்பிரியன் வீரச்சாவடைஞ்சு அவனின்டை வித்துடலை இரண்டு இயக்க அண்ணமார் முள்ளிவாய்க்கால் மணலிலை விதைச்சினம்.
முள்ளிவாய்க்காலே பிண வாய்க்கால் ஆகிட்டுது. சண்டை பிடிச்சு வீரச்சாவடைஞ்ச ஒரு இயக்க அண்ணை துவக்கை இறுக்கிப் பிடிச்சபடி கிடந்தார். எங்களுக்கு கிட்ட ஆமி வந்திட்டான். கனக்கப் பிணங்களைத் தாண்டி வந்துதான் ஆமிட்டை சரணடைஞ்சம். பிணங்கள் மிதக்க இரத்தக் கடலாய்ப் போன நந்திக்கடலுக்குள்ளாலைதான் ஆமிட்டை சரணடைஞ்சம். இயக்கத்தின்டை ஆயுதங்களை கைப்பற்றின மாதிரியும் ஏதோ அடிமையளை பிடிச்ச மாதிரியும் ஆமி எங்களை கொண்டு போனாங்கள்… எங்களோடை வந்த ஞானம் அண்ணையையும் அவரின்டை மனுசி பிள்ளையளையும் இயக்கமெண்டு, ஆமி வேற பக்கமாய் கூட்டிக்கொண்டு போனான்.. போட்டிருந்த உடுப்பைவிட ஒண்டும் இல்லை. வெறும் கையோடை வந்தம்.”
தங்கச்சி சொல்லி முடிக்கையில் வானம் கவிழ்ந்து போயிற்று.