ஒரு மிகப்பெரிய வாழ்வியலை, 200 பக்கங்களில் அடக்குவது எவ்வளவு சிரமமானது...?
வினோதன் பேசுகிறான். அவனின் வாழ்க்கை, அண்ணன் மீதும் தங்கையின் மீதும் கொண்ட அன்பு, அம்மாவின் மீது வைத்த காதல், அப்பா எனும் பிம்பத்தில் ஒளிந்து கிடந்த அப்பழுக்கற்ற எதிர்பார்ப்பு மற்றும் காதல், போர், இனப்படுகொலை, நிலம், வாழ்விட மாற்றங்கள், உதனை சுற்றிய சோகம், வலி, வேதனை............. இவைகளை மையப்படுத்தியே கதை நகர்கிறது.
ஒவ்வொரு அத்தியாயம் துவங்கும்போதும் ஈழத்தின் அழகு, பூக்கள், மரங்கள், பறவைகள் என அதன் இயற்கை சார்ந்த அழகியலை நம்மோடு பகிர்ந்துகொண்டே கதையை துவங்குகிறார்.
அப்பாவின் மீது கொண்ட அன்பும் ஏக்கமும் அண்ணனின் மீது வினோதனுக்கு தெரியாமலேயே அளவற்று பாய்கிறது.
கிளிநொச்சியில் அடிக்கடி நடக்கும் குண்டு வீச்சுகளால் இடம்பெயர்ந்து சென்று வாழ்வது மீண்டும் அதே இடத்தை தேடி வருவதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் இடங்கள். குண்டு வீச்சுக்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறுவது, முக்கியமான பொருள்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு மீதியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியேறுவதெல்லாம் சோகம் நிறைந்த இடங்கள். மீண்டும் வந்த அவர்கள் வாழ்ந்த வீட்டை வந்தடையும்போது காடு மண்டி, அதன் சுவடுகளை இழந்து வெற்றுடம்புடன் நிற்கும் கிராமம்....
மாடுகளும் நாய்களும் புறாக்களும் பயணத்தில் கூடவே வந்து உயிரிழக்கும் இடங்கள் பேரதிர்ச்சியின் உச்சம்.
அண்ணன் இயக்கத்தில் சேர்ந்து, இடையில் வந்தபோது நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் அவ்வளவு வழிகளோடே நம்மால் நகர முடிகிறது. அடுத்த சந்திப்பு நிகழ்வதற்குள் வீரச்சாவடைந்து சடலமாக வீடு வந்தடையும்போது நமக்கும் அழ தோன்றுகிறது.
மூன்று குழந்தைகளை இயக்கத்திற்கு அனுப்பி சுதந்திர காற்றை சுவாசிக்க துடிக்கும் இன்னொடு அம்மாவை கடவுளென என் மனம் நினைக்கிறது. அவளின் வீரம், அவளின் பேச்சுகள் யாவும் இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.....
முள்வேலி, முள்வேலி சந்திப்புகள், வினோதனின் படிப்பு, பிரிவு, கந்தக காற்று, குண்டு சத்தம், வானொலியில் 9 மணிக்கு ஒலிபரப்பாகும் வீரர்களின் மரண செய்தி, மாவீரர்களின் சமாதி, படுகொலைகள், வயிறு கிழிந்து குடல் சரிந்து கிடைக்கும் மனிதர்கள், புகைப்படம் தேடி அலையும் தம்பியின் பயணம், என நம்மை கடந்து செல்லும் பக்கங்கள் , ஒருவிதமான அச்சத்தை தந்து கைகளை நடுங்க செய்கிறது.............................................
" நல்லா இருக்கியளா? அழக்கூடாது! எங்கடை சனத்துக்காகப் போராடுறதுதான் எனக்கு பிடிச்சிருக்குது. நீங்கள் சந்திசமாய் இருக்க வேணும்" அம்மாவின் கலங்கிய விழிகளைத் துடைத்துபடி சொன்னான்....
' இந்த சண்டை எல்லாம் எப்ப முடியும்? நாங்கள் எல்லாரும் எங்கடை வீடுகளிலை ஒண்டாய் வாழுற காலம் எப்ப வரும்?'
" கெதியிலே இந்த சண்டையள் முடியும். எங்களுக்கு ஒரு விடிவு வரும். விடுதலையடைஞ்ச தமிழீழத்திலை எங்கடை மக்கள் எல்லாம் நம்மதியாய் இருப்பினும்"
பேருந்து வேகமாக விரைந்தது. அவன் இறங்கி வருவானென அப்போதும் நம்பிக்கொண்டிருந்தது மனம். ஏமாற்றம்தான். அவன் வரவில்லை. பேருந்து மறையத் தொடங்கியது.
அழுதபடி ஒருத்தி முட்கம்பிகளுக்குள்ளால் வெளியே கையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். அவளின் கையில் இருக்கும் குழந்தையும் முட்கம்பிகளுக்குள் கைய நீட்டியது. பிச்சைக்காரர்களே இல்லாத நிலத்தின் சனங்கள் கையேந்தும்படியாய் அடைக்கப்பட்டார்கள்.
"எங்கடை பிள்ளையளின்ரை நினைவுகளை நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களால் அவங்களை அழிக்கேலாது....."
"எங்கடை பிள்ளையனை உங்களாலை இல்லாமல் செய்யவும் ஏலாது. எங்கடை பிள்ளையளின்டை கனவை உங்களாலை அழிக்கவும் ஏலாது....."
எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இப்படி பிரச்சினைகளா......?
ஆனால் ஈழத்தில் மட்டும் ஏன்...? தனக்கான மண்ணை, இது என்னுடைய மண் என்று போராடும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே...?
புலிகளின் தாகம்.... தமிழீழ தாயகம்.......
( நாவலை அறிமுகம் செய்த தோழர் செந்தில் வரதவேலுஅவர்களுக்கு நன்றி)
கவிஞர் பிறைமதி, பார்வேட்டை என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக