2000ஆமாம் ஆண்டு. அப்போது இடம்பெயர்ந்து கந்தபுரம் என்ற ஊரில் வசித்துக் கொண்டிருந்தோம். போர்க்களத்தில் போராளிகளுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கிராமமாக மக்கள் செல்வது வழக்கமானது. பதுங்குகுழியமைத்தல், உணவு சமைத்தல் போன்ற உதவிகள் ஒத்தாசைகளை செய்வதற்காக செல்லுவதுண்டு. அப்படிச் செல்பவர்கள் சண்டைகளில் சிக்கி இறப்பதும் உண்டு. பின்னர் அவர்கள் எல்லைப் படை வீரர்களாக புலிகளால் கௌரவிக்கப்படுவார்கள். அப்போது எங்கள் ஊரில் இருந்தும் பலர் போர்க்களத்திற்குப் புறப்பட்டார்கள். எனக்கு அப்போது 17 வயது. இதனால் அனுமதி மறுக்கப்பட்டது. நானும் என்னுடைய நண்பன் ஒருவனும் எப்படியோ அந்தக் குழுவில் புகுந்து கொண்டு லாரிக்குள் ஏறிக்கொண்டோம்.
எனது சகோதரன் இயக்கத்தில் இருப்பதால் அவனை பார்க்கலாம் என்பதற்காகவுமே புறப்பட்டேன். அப்போது, ஆனையிறவை புலிகள் இயக்கம் கைப்பற்ற தயாராகியிருந்த நாட்கள். பூநகரி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தது. பூநகரியின் கௌதாரி முனை என்ற பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய முகாங்கள் இருந்தன. கௌதாரிமுனை மிகுந்த முக்கியமான மையமாக செயற்பட்டது. அங்கு சண்டைகள் மூழ்வதுடன், யாழ்ப்பாணத்தில் இருந்தும் இராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதுண்டு. என்றாலும் கௌதாரி முனை ஊடாக புலிகள் யாழ்ப்பாணத்திற்கும் இரகசியமாக ஊடுருவி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.
கந்தபுரத்திலிருந்து புறப்பட்ட, மக்களை ஏற்றிய லாறி, பூநகரி நோக்கி விரைந்தது. பூநகரி மக்கள் யாருமற்ற பாழடைந்து காணப்பட்டது. பழமையான அந்த நகரத்தின் கடைத்தெருக்கள் எல்லாம் பற்றை மண்டியிருந்தது. எங்கு பார்த்தாலும் உருக்குலைந்த மண்மேடுகளும் இராணுவமுகாங்களுமாய் ஆளரவமற்றிருந்தது. நெடுங்காலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து 1993இல் புலிகளால் கைப்பற்றப்பட்டபோதும், 1996 கிளிநொச்சியின் இராணுவத்திடம் வீழ்ந்த பின்னரும் யாழ்ப்பாணம், ஆனையிறவில் நிலை கொண்ட இராணுவத்தினரால் அங்கு மக்கள் வாழமுடியாத நிலை நீடித்தது.
அங்கு நேற்றும் கடுமையான சண்டை மூண்டதென லாறியில் இருப்பவர்கள் பேசிக்கொண்டனர். அண்ணா, அங்கே நிற்கக்கூடும், அல்லது அவனை பற்றிய தகவல்கள் எதையாவது பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். போராளிகள், எல்லைகளில் காவல் இருந்தனர். போராளிகளின் முன்னரங்குகளும் தெரிந்தன. எதிர்திசையில் இராணுவத்தினரின் காவலரண்களும் நடமாட்டங்களும் தெரியும். திடீரென விமானங்கள் வந்து தாக்கும். இராணுவத்தினரின் படகுகள் கடல் வழியில் தென்படும். போராளிகள் கரையிலிருந்து தாக்குவார்கள். போராளிகளின் படகுகள் கடலுக்குள் சென்று இராணுவத்தை தாக்கும்.
என்ன நடக்கப் போகிறதே என்ற அச்சம். “பாடியாய்தான் வீட்ட போகப் போறம்..” என்று என் நண்பன் ஒருபுறம் கிலியை ஏற்றுவான். அம்மா, தங்கச்சி எல்லோரையும் நினைக்க திரும்ப போய்விடலாம், பொறுப்பாளரிடம் சொல்லிவிடலாம் என்றும் தோன்றியது. போராளிகளின் சிரிப்புச் சத்தம் போர்க்களத்தை கலகலப்பாககியது. ஒருவரை ஒருவர் கிண்டலடித்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டும் இருந்தனர். போர்க்களத்தின் நெருக்கடிகளைக்கூட மகிழ்ச்சியாக அனுபவித்துப் பேசும் அவர்களைப் பார்க்கையில், எனக்குள் இருந்த பயம் கொஞ்சம் தணிந்தது. அண்ணாவை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அதிகரித்தது.
கடுமையான சண்டைக்குள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, மீன்களை அள்ளி வந்து போராளிகளுக்கு கொடுக்கும் மீனவர்களிடமும் அண்ணாவை கண்டீர்களா என்றும் விசாரித்தேன். நானும் எனது நண்பனும் போராளிகளுக்கு சமைத்த உணவுகளை எடுத்துச் சென்று கொடுப்பதுண்டு. போராளிகள், “தம்பிக்கு எத்தினை வயது” என்று கேட்கவும், 18 முடிந்துவிட்டது என்றேன். அவர்கள் என் பதிலில் நம்பிக்கையின்றிப் பார்த்தனர். எங்களுடன் வந்தவர்கள் மண்மலைகளை அண்டிய பிரதேசங்களில் பதுங்குகுழிகளை அமைத்தார்கள். அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை செய்வதுமாய் நகர்ந்தன நாட்கள். கிடடத்தட்ட ஒரு வாரம் கழிந்துவிட்டது.
ஒரு நாள் நானும் என்னுடைய நண்பனும் பதுங்குகுழி அமைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உணவை எடுத்து சென்று கொண்டிருந்தோம். அன்று பாரிய சமருக்கு இராணுவம் தயாராகிக் கொண்டிருந்தது. மண் மலைகளிலிருந்து கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்க, வானத்தில், விமானங்கள் வந்து குவியத் தொடங்கின. வெட்டை வெளியான அந்தப் பகுதியில் ஒரு பதுங்குகுழியும் இல்லை. எங்கு பதுங்குவது என்று தெரியாது நானும் அவனும் ஒடினோம். போராளிகள் உடற்கரைகளிலும் மண் மலைகளிலும் போராளிகள் உசாராகிக் கொண்டிருந்தனர். மற்றொரு புறத்தில் யாழ்ப்பாணக் கரைகளிலிருந்து செல்கள் வந்து விழத் தொடங்கின. நானும் எனது நண்பனும் தூர்ந்துபோன கிணறு ஒன்றுக்குள் குதித்தோம்.
வான்வழியாகவும் தரைவழியாகவும் கடும் தாக்குதலை நடத்தியது இராணுவம். போராளிகள் பதிலுக்கு யாழ்ப்பாணம் நோக்கி, கடல் வழியாக பீரங்கிக் தாக்குதலை நடத்தினார்கள். போராளிகளின் நகர்வுகளும் வானங்களின் நகர்வுகளும் நிறுத்தப்படவில்லை. விமானங்கள் குண்டுகளை கொட்டி அந்த இடத்தையே சின்னா பின்னாக்கியிருந்தது. காயப்பட்ட போராளிகள் மணல்மலை முகாங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். இரண்டு போராளிகள் வந்து அந்தக் கிணற்றிலிருந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் உயிரோடுதான் இருக்கிறேனா என்று யோசித்தேன். நான் நன்றாகவே பயத்தில் அதிர்ந்து போனேன். வார்த்தை ஒன்றும் வாயில் வரவில்லை. எனது நண்பன் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். மணல்மலைகளில் சுற்றித் திரிவதை நிறுத்திவிட்டு, பாசறையின் அறை ஒன்றுக்குள் பேசாமல் படுத்திருந்தேன்.
கிராமங்களிலிருந்து மக்களை அழைத்து வரும் செயற்பாடுகளுக்கான போராளிப் பொறுப்பாளர் பாசறை வந்ததும் என்னையும் என் நண்பனையும் கண்டு அதிர்ந்துபோனார். “ஆர் இவர்களை அழைத்து வந்தது” என்று பேசிக் கொண்டிருந்தார். எந்தப் பாடசாலையில் கல்வி கற்கிறீர்கள், எத்தனையாம் வகுப்பு என்று கேட்டார். நான் அண்ணாவை தேடி வந்ததைப் பற்றி சொன்னேன். உடனேயே எங்களை தன்னுடைய ட்ரக்கில் ஏற்றிக் கொண்டார். அண்ணா பற்றிய விபரங்களை பெற்றுக்கொண்டார். விரைவில் அண்ணாவை விடுமுறையில் வீட்டுக்கு அனுப்புவதாகவும் சொன்னார். நாளையே பாடசாலை போகவேண்டும் என்றும் பாடசாலைக்கு வந்ததை உறுதிப்படுத்த வகுப்பாசிரியரின் கையப்பத்துடன் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் என்றும் சொல்லி வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார் அந்தப் போராளி. வெகு நாட்கள் அண்ணாவுக்காக காத்திருக்க, ஒருமுறை விடுமுறையில் வீடு வந்தான். அதன் பிறகு, வீரமரணம் அடைந்து வித்துடலாய்தான் வீடு திரும்பியிருந்தான்.
நன்றி - விகடன் தடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக