"காத்துக்கு விளக்கு நூரப் போகுது! சுளகை வடிவாய்ப் பிடி" என்ற ஆரம்பத்தோடு கதை நகரும். எதிர்வரும் காலங்களில் உண்மையான ஈழ வரலாறு அழிக்கப்படலாம், மறைக்கப்படலாம் "ஈழம்" பற்றி உண்மையான ஈழப்போராட்ட வலிகள் பற்றி, போர்குற்றங்கள் பற்றி "நடுகல்" விபரித்து சொல்கிறது. ஈழம் பற்றி ஆராய விரும்புபவர்களுக்கு முக்கிய மூலாதாரமாக "நடுகல்" இருக்கும்.
வன்னி நிலத்தின் அழகியலையும், வாழ்வியலையும் தன் எழுத்துகளால் வாசிப்பவர்களை வன்னி மண்ணை நேசிக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர் தீபச்செல்வன். குறிப்பாக கிளிநொச்சியை. தன் சொந்த நிலத்தில் விடுதலை இன்றி சுதந்திரம் பறிக்கப்பட்டு வாழும் நம் இனத்தின் துயரங்களையும், வலிகளையும், ஏக்கங்களையும் நாவலில் சொல்லி கண்களை கலங்கடித்துவிட்டார்.
அண்ணாவுக்கு ஒண்டும் நடந்திருக்காது... தங்கையும், தம்பியும் அம்மாவும் காத்துருக்க நிலத்தின் மீதும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் களமாடி அண்ணா வீரச்சாவு வாசிக்கும் கனம் கண்ணீர் நிரம்பிய கண்கள் அண்ணா வந்து விடுவான் அண்ணா எல்லாமாவும் இருக்கிறான். அண்ணாவுக்காக கண்ணீருடன் காந்திருந்த அம்மாவுக்கு! "அண்ணவின் வித்துடல்" கதை அண்ணாவின் நினைவுகளுடனே நகர்ந்து செல்லும் நிலையில் "அண்ணா" துயரத்திலிருந்து இன்னும் மீள விடவில்லை.
அண்ணாவின் புகைப்படங்கள் போராட்டகாலங்களில் அழிந்தவிட்டாதால் அண்ணாவின் முகத்தை பார்க்க புகைப்படத்திற்கான தேடல்களும், மாவீரர் துயிலும் இல்லங்கள் கல்லறைகள் அழிக்கப்பட்டு அண்ணாவின் ஞாபகமாக அம்மா வைத்திருந்த கல்லும் அண்ணாவின் ஞாபகமாக இருந்த நடுகல்லையும் விட்டுவைக்கவில்லை. துயரம் மேலும் வலுப்பெற்றது.
முப்பது வருட ஆயதப்போராட்டத்தின் முடிவின் பின்னர் தமிழ் மக்களின் விடுதலையையும், பண்பாட்டுதளத்தையும் அரசியல் ரீதியாக நகர்ந்த வேண்டும் என்பதேயே "வினோதன்" கதாப்பாத்திரத்தினூடாக சொல்லப்படுகிறது.
"உன்ரை அண்ணா உனக்குள்ள உனக்கு பக்கத்திலை,உங்கட அம்மாவுக்குள்ள இருக்கிறான். அவனின்ரை வீரச்சாவுதான் உன்ன படிக்க தூண்டினது. அதுதான் உங்கடை வறுமையை நீக்கினது. அதுதான் உன்னை ஒரு புகைப்பட ஊடகவியலாளரா ஆக்கினது. இறந்த பிறகும் உன்ரை அண்ணா வாழுறான். அவன் உங்கட எல்லா வளர்ச்சிலையும் இருக்கிறான். ஒரு மாவீரனுக்கு மரணமில்லை. அவையின்ரை மரணம் மகத்துவமானது! அவையின்டை கனவு வீண் போகாது..."
பசியின் வாட்டத்தாலும், நோய்களின் பிடிகளிலும் அகப்பட்டு தன் தோட்டத்தில் விளைந்த உணவுகளை உண்ணாமல் பசியில் மரணத்தின் கடைசி தூரத்திற்க்கு சென்று வந்த மக்களை, இடப்பெயர்ந்து கலைத்து போன மக்களை குண்டுகளும் கொன்றழித்தது. சுதந்திரமாக வாழ்ந்த அந்த மண்ணில் "இரத்தவாடை" கடைசியில் முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்று முள்வேலி முகாம்களின் சித்திரவதை, துன்பங்களையும் "நடுகல்" நாவல் சொல்லுகிறது.
நான் வாழ்ந்த மண்ணில் நான் பட்ட துயரங்களயும், நான் இழந்த உடமைகளையும் நான் இழந்த எனது உறவையும், நான் இழந்த சுதந்திரத்தையும், நான் கண்ணீர் விதைத்த மண்ணையும், கட்டிக்காத்த வாழ்வியலையும் "தீபசெல்வன்" அவர் கண் கலங்க மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறார். "நடுகல்" கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூட இல்லை, என்னோடு எனது வரலாறு எனது கையில் இருக்கும் என்று நினைக்கவில்லை.
"தீபச்செல்வன்" அவர்கள் தமிழ்மொழிமீதும்,தமிழ் இனத்தின் மீதும் கொண்ட அன்பும், ஈடுபாடும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. நாவல் பாதுகாக்கப்படும் பின்வருகின்ற சந்ததிக்கு ஒப்படைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக