தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

ஞாயிறு, 19 மே, 2019

பறவைகளை நேசிக்கும் சிறுவன்! சுகிர்தா சண்முகநாதன்



நடுகல் விமர்சனம்

விநோதன்

இவன் தன் அண்ணாவையும், அம்மாவையும், தங்கையையும் மட்டும் நேசிக்கவில்லை. இவன் இயற்கையின் காதலன். குருவிகளையும், விலங்குளையும், இயற்கையையும் நேசிக்கின்றான். இயற்கையை நேசிப்பதாலேயே அவன் உள்ளங்களை நேசிக்கின்றான்.


வினோதனின் வாழ்வில் அரைவாசியை நானும் வாழ்ந்துள்ளேன் என்பதால் என் கடந்தகாலமும் வாசிப்பினூடே மீட்டப்படுகிறது. அவனாகவே நானும் வாழ்ந்தேன்.

அவன் அம்மா ஒவ்வொரு முகாமாகத் தன் மகனைத் தேடி அலைந்தபோது நானும் அவளைத் தேடி வீதியில் காத்திருந்தேன்.

அவன் தன் அண்ணாவின் புகைப்படத்தைத் தொலைத்தபோது நானும் எம் வீட்டிலிருந்த மாவீரர்களின் படங்களை இடப்பெயர்வின் போது வாகனத்தில் வந்த காயப்பட்ட போராளிகளிடம் ஒப்படைத்த நினைவுகள்....

கதையில் பல குறியீட்டுச் சம்பவங்களையும் உரையாடல்களையும் விதைத்துச் செல்வதனூடாக எம் மனச்சாட்சியை மீண்டும் மீண்டும் உலுக்கிச் செல்கிறார். அத்தனை குறியீடுகளும் மாண்டுபோன எம் மக்களின் சாட்சியங்களாக!

ருக்குமணி

"அவள் காணாமல் போகச்செய்யப்பட்ட பிள்ளைகளுக்காய் போராடும் தாய்மாரின் குறியீடு ஆனாள்.

படுக்கை விரிக்கப்பட்டபடி இருந்தது. அருகில் கைபேசியும் வெற்றிலைப் பையும் இருந்தன. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட அவளது சடலத்தில் பழுத்தபிலா இலைகள் ஒட்டியிருந்தன. வெறுமை கவிந்திருந்த அந்தக் கூடாரத்தில் கலகலத்த அவளது குரல் கேட்குமாப்போலொரு பிரமை. குரல்கள் எங்கும் செல்வதில்லை."

மறக்கவிரும்பும் நிகழ்வுகளையும், நினைவுப்பெட்டகத்தில் பாதுகாக்கும் பல மறக்கமுடியாத பல நினைவுகளையும் விரும்பியும் விரும்பாமலும் மீட்டியபடியே கடக்கிறேன்!

இறுதிப்போரில் பின் முகாம்களில் அடைக்கப்பட்ட காலங்களை நான் அனுபவிக்காவிட்டாலும் இங்கிருந்துகொண்டு நாம் பட்ட வலியும் வேதனையும் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை. இந்த இடத்தில் அவள் சொன்ன வார்த்தைகளை இன்று நினைத்தாலும் உயிர்போகிறது. "எனக்கு ஒன்று நடந்தால் என் பிள்ளைகளுக்கு நீதான் பொறுப்பு" ஓர் அன்னையால் இவ்வாறு சொல்ல முடியுமென்றால் அவளின் நிலை எத்தகையது?

"முட்கம்பிகள் மாத்திரம் வாதை தருவதல்ல. முள்வேலி முகாமின் காற்றும் வாதைதான். தண்ணீரும் வாதை தான், உணவும் வாதைதான், கூடாரங்களும் வாதைதான், முள்வேலி முகாமின் அறிவிப்பும் வாதைதான். அங்குள்ள வைத்தியசாலைகளும் நிரம்பிய மலக்குழிகளும் வாதை தான்"

சிறுவர்களின் உலகத்தில் எந்தவித போலித்தனமும் இருப்பதில்லை. வாழ்வை அதன் போக்கில் வாழவும், தம் கண்முன்னே விரியும் உலகின் கண்ணாடியாய் தம்மை இனங்காட்டவும் அவர்கள் தயங்குவதே இல்லை.

"ஆனால் உன்ர அண்ணா உனக்குப் பக்கத்திலை , உனக்குள்ள உங்கடை அம்மாவுக்குள்ளை இருக்கிறான். அவனின்ர வீரச்சாவு தான் உன்னைப் படிக்கத் தூண்டினது. அதுதான் உங்கடை வீட்டின்ரை வறுமையை நீக்கினது. அதுதான் உன்னை ஒரு புகைப்பட ஊடகவியலாளன் ஆக்கினது. இறந்த பிறகும் உன்ரை அண்ணா வாழுறான். அவன் உங்கடை எல்லா வளர்ச்சியிலையும் இருக்கிறான். ஒரு மாவீரனுக்கு மரணம் இல்லை. அவையின்ர மரணம் மகத்துவமானது. அவையின்டை கனவு வீண்போகாது வினோதன் " இதுதான் எங்கள் பலம்!

எந்தவித எதிர்பார்புகளுமற்று நேசிக்கத்தெரிந்த உன்னதமானவர்களைப் பார்த்து வளர்தவளாக வினோதனைப் போலவே நானும்!

-சுகிர்தா சண்முகநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக