"நினைவெல்லாம் அவனது முகம் அப்பியிருந்தது. மனத்திரையில் அண்ணா நடக்கிறான். பின்னர் படமாகத் தொங்குகிறான் . எழுத முடியாது நெஞ்சிற்குள் முட்டி மோதிக்கொண்டு நிற்கும் ஒரு கவிதையைப் போல அவனது முகம் நெருடுகின்றது "
மண்ணின் மீதும்/ மக்கள் மீதும் /குடும்பம் மீதும் / எதிர்காலத்தலைமுறை மீதும் தணியாத காதல் கொண்ட ஒரு தமையன், தன் அன்பான அம்மா தம்பி தங்கையை விட்டு , தன்னின மக்களின் விடுதலைக்காக எப்படி தன்னை ஓர் ஆயுதமாக்குகின்றான் என்பது ஒரு புறமாகவும் , மறுபக்கம் அவனின் வீரமரணம் குறித்த நீண்ட செய்திகளையும் , தியாகத்தையும் போற்றித் துதிக்கவும் முடியாது , பேசித்திரியவும் முடியாது அவனது தம்பியும் அந்தக்குடும்பமும் சுற்றமும் தவிக்கும் தவிப்புக்களும் ஏக்கங்களும் கண்ணீர் சுமந்த நினைவுகளுமே தீபச்செல்வனின் நடுகல் நாவலின் மையவோட்டம்.
சிறு வயதில் தந்தை இல்லாத ஏக்கத்தில் தந்தையின் வரவை எண்ணிக்காத்திருக்கும் தம்பி வயதாக வயதாக தந்தையின் வெறுமையை உணர்வதும் பின்னரான காலங்களில் தமையனின் அன்பை தன்னுடன் இருத்திக்கொள்வதற்காக பாடுபடுவதுமென நெஞ்சைக் கனதியாக்கும் , உணர்வுக்குழம்பாக நடுகல் நகர்கின்றது.
வீட்டிலே விடுமுறை ஒன்றில் வந்த தமையன் முன் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் தம்பியிடம்
"தம்பி எழும்பிச் சாப்பிடு ... " என்று சொல்லிக்கொண்டே உடுப்புக்களை மடித்தான் அண்ணா.
.....
"நீ நாளைக்குப் போக மாட்டேன் எண்டு சொல்லு சாப்பிடுறன் "
......
"நல்ல விளையாட்டுத்தான் "
.......
"எனக்கு என்ரை அண்ணா வேணும் "
"எனக்கும் அண்ணா வேணும் அம்மா " தங்கைச்சியும் தன் பங்குங்கு அனுங்கினாள் "
ஒரு குடும்பத்தின் பாசத்தை / பிரிவாற்றாமையை வெளிப்படுத்திக்கொள்ளும் பாங்கில் கதாபாத்திரங்கள் நகர்கின்ற போதும்
பெரும்பாலும் எல்லாக்குடும்பங்களின் நிலையும் இதுவாகத்தான் ஒரு காலத்தில் இருந்தது என்பதையும் நாவல் சொல்லாமல் சொல்லிச்செல்கின்றது.
கதாபாத்திரங்களுடன் நாம் அறிந்த அனுபவித்த கேட்ட வெவ்வேறு மாந்தர்களையும் நினைவூற்றிச்செல்லும் பெருவெளியாக இந்த நாவல் விரிந்து செல்வது ஆசிரியரின் மொழி வீச்சு என்றே சொல்ல வேண்டும். அனுபவத்தின் வழி நிற்கும் மொழிக்கு எப்போதும் செறிவும் கனதியும் அதிகமாகவே இருக்கும்.
நாவலில் வருகின்ற தம்பியின் வாயிலாக , தமையனின் நாடு , வீடு குறித்த அனைத்துக்கனவுகளையும் இரத்தமும் சதையும் வலியுமாக வாட்டியெடுத்து வாசகர்களின் உள்ளங்களை நெகிழவைத்திருக்கும் ஆசிரியரின் அனுபவமொழிக்கு அமுத சுரபியினை ஒத்த இயல்பு இசைந்துகிடக்கின்றமையை வாசகர்கள் உணர்ந்திருக்கக்கூடும்.
எனக்குக் கூட , பக்கங்கள் நகர நகர மனம் கனத்துக்கொண்டே போனது. ஓரிடத்திலிருந்து வாசிக்க முடியாது பேருந்து /அலுவலகம் என மாறி மாறி நடுகலும் கையுமாக அலைந்தும், மன அங்கலாய்ப்புக்களின் நடுவே தான் இந்த வாசிப்பு சாத்தியமானது .
நடுகல் நாவல் மீதான உலகம் தழுவிய தமிழ் வாசகர்களின் விமர்சனங்களின் நேரெதிர் விசைகளால் உந்தப்பட்டு , நாவலைப்பெற்ற மறு நாளே வாசித்துத்தீர்க்க வேண்டும் என்ற பேராவலுடன் நூலைத்திறந்த நான் ஒரு சில பக்கங்களுக்கு அப்பால் நகரவே முடியாமல் திண்டாடி, இழப்புக்களின் வலியை மீள மீள நினைந்து இயலாமல் போய் நாவலுடன் உறங்கிப்போன ஓரிரு நாட்களும் இருக்கத்தான் செய்கின்றது.
இரத்த வாடையும் , பிணக்குவியல்களும் , சிதைந்த மனித உடல்களும் என்னை மீறி எனக்குள் கனத்த பாரத்தைத் தர, நாவலின் கதாபாத்திரங்களையும், வார்த்தைகளின் படிமங்களையும் தாண்டி மனதை வேறொரு துயர் இழுத்துச்செல்ல மீள ஒருமுறை இவையெல்லாம் நேரில் தாங்கும் வலிமை இல்லை என இதயம் கனத்துக் கொண்டேயிருந்தது.
அந்நியர்களின் இரும்புக்கோட்டைக்குள் சிதைந்தும் கருகியும் மாறுபட்ட கோலத்துடன், பெருவாழ்வின் / பெரும் சாம்ராஜ்ஜியத்தின் சுவடின்றி தடயங்களின்றி உலர்ந்துபோன காட்சிகளையும் , மக்களின் உள் மனக்காயங்கள் , வலிகளையும் கண் முன் நிறுத்தி அந்த மாபெரும் இராஜ்ஜியத்தை/ எம் மண்ணை /எம் நிலத்தை/ அனுபவிக்காத நாமெல்லாம் பாவிகள் தான் என்பதையும் உணரச்செய்யும் பெருந்துயரம் இந்த நாவலைப்படிக்கப்போகும் இளைய தலைமுறையினரிடம் தொற்றியே தீருமென்பதில் ஐயமில்லை.
மேலும் தியாகங்களின் வழி கட்டமைக்கப்பட்ட கனவு தேசம் ஒன்று எம்மிடம் இருந்ததென்பதும், மக்கள் மீதான கரிசனைகளும் தீவிரப் போக்கும் மக்களை இயற்கையுடன் இணைந்து நிம்மதியும் பெருவாழ்வும் வாழச்செய்ததென்பதும் நாவலில் பதியப்பட்டிருப்பது நாளை இதனை ஓர் வரலாற்று ஆவணமாக்கும் என்பதையும் மறுக்கமுடியாது.
உண்மையில் , கனவும் ஏக்கமும் நிறைந்த மனித வாழ்விலே நிஜங்களைக் கடந்து நிலைத்து நிற்பதென்னவோ நினைவுகள் மட்டும் தான்.
எனினும் வாழ்ந்து முடிந்த எம் மனிதர்கள் சார்ந்த நினைவுகளைக்கூடப் பேணுவதனைக் குற்றமாகப் பிரகடனப்படுத்தும் இருண்ட தேசத்தில் தான் இன்னமும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பது பெருந்துயர்.
ஆக, எம் அனைவரதும் ஒட்டுமொத்த மௌனத்தையும் தனிக்குரலாகப் பேசிமுடித்திருக்கின்றமையே தீபச்செல்வன் அண்ணாவின் நடுகல் நாவலின் மிகப்பெரும் வெற்றி .
இன்னொரு முறை உயிர்களையும் உறவுகளையும் தியாகம் செய்யும் வல்லமை எவ்வளவுக்கு எவ்வளவு எம்மிடம் இல்லை என்பது உண்மையோ அதற்கும் அதிகமாக கடந்து போன எம் வரலாற்றின் தியாகங்களையும் வீரத்தையும் நினைவுகளையும் நாம் எம் சந்ததிக்குக் கடத்த வேண்டும் என்பதும் தமது பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் , அண்ணன்களை/அக்காக்களை இழந்த தம்பிகள் தங்கைகள் நிழற்படங்களிலாவது அவர்களின் முகம் பார்த்துக் குறைதீர்க்கவேண்டும் என்பதும் எம் கனவு தான்.
நடுகல் நாவலின் எழுத்தின் முடிவு இன்று வெறுமையைத் தந்து உள்ளத்தை வலிக்கச் செய்தாலும் நாளைய ஓர் நாளில் மெய்ப்பட வேண்டும். ♥
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக