தீபச்செல்வனின் நடுகல் நாவல் ஸ்டிகவரி புக் பேலஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

நடுகல்- ஒரு தலைமுறையின் பயணம்



ஒரு இன விடுதலைக்கான நெடும் போராட்டம் தன் வரலாற்றைச் சரியாகப் பதிவுசெய்வதன் வழியாகவே, வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டுத் தன் இலட்சியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முற்படுகிறது. அத்தகைய யுத்தத்தில், இன அழிப்பை தீர்வாகக் கொண்ட தரப்பு வலிமை பெறும்போது, அது தான் நிகழ்த்தும் கொடூரங்களை சாட்சியங்கள் இல்லாமல் அடுத்த தலைமுறையிடமிருந்து மறைப்பதன் வழியாகவே அந்த இன விடுதலைக்கான வேட்கையை முடக்க முயற்சி செய்கிறது. இப்படியானதொரு இன அழிப்பை, அடையாள அழிப்பை, யுத்தத்தின் விளைவுகளை, விடுதலைக்கான வேட்கையை, இயலாமையை, இழப்புகளை ஒரு தலைமுறையின் பயணத்தின் வழியே பதிவுசெய்கிறது நடுகல்.

ஒரு தரப்பின் நியாயங்களைப் பதிவு செய்வதை விட அந்த தரப்பின் மனித உணர்வுகளையும், அவர்களின் விருப்பங்கள், தேவைகள், ஒரு யுத்தம் இயல்பு வாழ்க்கையிலிருந்து அவர்களை எப்படி கிழித்துத் தூர வீசுகிறது என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்கிறது இந்த நாவல்.

“உங்களை எல்லாம் விட்டிட்டு வந்தது எனக்கும் கவலைதான். ஆனால் எங்கடை மண்ணை எதிரியிட்டை இருந்து மீட்கவும் நீங்கள் எல்லாம் சந்தோஷமாக வாழவுமே நான் இயக்கத்திற்கு வந்தேன்” எனக் கடிதம் எழுதும் வெள்ளையன்.

“நிமிர்வோடும் பெருமிதத்தோடும் வாழ்ந்த இடத்தில், அடிமையைப்போல வாய்மூடி மௌனமாக நிற்க, மனம் குமுறிது. தேகம் எரிந்தது” என்று ஆர்மி கேம்பில் வியர்த்து வழிந்து நிற்கும் வினோதன்.

“எங்கடை பிள்ளயளின்ரை நினைவுகளுக்கு நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களாலை அவங்களை அழிக்கேலாது...” என்றவாறு இராணுவத்தை நோக்கி மண்ணைவாரி வீசும் அம்மா.

“எனக்குக் கொள்ளிவைக்கிறதுக்கு என்ரை பிள்ளையைத் தாங்கோ” என்று போராட்டங்கள் தோறும் கத்திக் குரலெழுப்பும் ருக்மணி.

கொத்துக் குண்டுகளுக்கு பலியாகும் மாடுகள். இடம் பெயரும் இடங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கட்டப்படும் வடிவான வீடுகள். வீட்டின் சுவர்களில் கரிக்கட்டையால் வரையப்பட்டிருக்கும் அடையாளம் அழிக்கப்பட்ட மாவீரர்களின் படங்கள்.

இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் ஈழம். நாவலின் சார்புத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நிலையிழந்து தவிக்கும் ஒரு வரலாற்றின் அழுத்தமான அடையாளமாக நிற்கிறது நடுகல்.



-செந்தில்குமார் நடராஜன். சிங்கப்பூர்

வியாழன், 11 ஜூலை, 2019

நடுகல் - கனிமொழி கடிதம்



மதிப்பிற்குரிய தீபச்செல்வன் அவர்களுக்கு,

தங்களது நடுகல் நாவலை வாசித்து முடித்ததும் இனம் புரியாத கனத்த உணர்வு என்னை ஆட்கொண்டது. வாழ்க்கையே போராட்டமாக கொண்ட ஒரு இனத்தின் தோல்வியை இன அழித்தொழிப்பை ஏற்க முடியாத விரக்தியாக இருக்கலாம். போருக்கு பின்னான போரைப் பற்றிய மிக முக்கியமானதொரு வரலாற்று பதிவு நடுகல். இந்நாவல் மூலம் சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. சில கேள்விகள் எழுந்தன.

திருடன்- போலிஸ் விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கும் இயக்கம்- ஆமி விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கும் வாழ்க்கை வேறு வேறு சூழ்நிலையை தந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகள்,போர் தின்று தீர்த்த குழந்தைகள், போர் களவாடிய குழந்தைப்பருவம் என அனைத்தையும் காட்சிபடுத்தியுள்ளீர்கள்.

இறந்த பின் ஆறடி நிலம் அனைவருக்கும் சொந்தம். எம் இனத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் தியாகத்தின் அடையாளத்தை அழித்தொழிப்பது என்பது இன அழிப்பின் உச்சம்.

ஒரு நிழற்படம் எத்தனை நினைவுகளை தந்துவிடுகிறது. இல்லாமல் போனவரின் இருப்பும் அந்த நிழற்படம் தான். வினோதன் நிழற்படங்களை தேடி அலையும் போது அது கிடைத்து விடவே பிரார்த்தது மனது.

முடிவற்ற இடம்பெயர்வு, பசி, இரவும் பகலும் பதுங்கு குழி வாழ்வு, இராணுவ முகாம் வாழ்வு மற்றும் மறுக்கப்பட்ட மாவீரர் நாள் அனுசரிப்பு என முடிவின்றி நீள்கின்ற துயரங்கள் என்னுள் திரும்ப திரும்ப எழுப்புவது ஒரு கேள்வியைத்தான். போரற்ற நிலத்தில் பிறந்திருக்க கூடாதா?

மக்களின் எண்ணிலடங்கா துயரங்களையும் மாவீரர்களின் போராட்டத்தையும் கடும் இன்னல்களுக்கு இடையே காட்சிபடுத்தியமைக்கு நன்றி.

-கனிமொழி அருணாசலம்

வெள்ளி, 5 ஜூலை, 2019

புலிகள் ஈழ சமூகத்தின் மனசாட்சி! மண்குதிரை




விநோதன் என்னும் ஒரு சிறுவன் போரில் மரித்த தன் அண்ணனின் புகைப்படத்தைத் தேடும் கதைதான் ‘நடுகல்’ எனச் சுருக்கிப் பார்க்கலாம். புகைப்படம் என்பதை ஒரு துண்டுச் சாரமாக எடுத்துக் கொண்டு இலங்கையில் நடக்கும் கலாச்சாரப் படுகொலையைச் சொல்வது ‘நடுகல்’லின் முதன்மை நோக்கம்.கவிஞர் தீபச்செல்வனின் முதல் நாவல். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.

தமிழ் மரபில் தாய்க்கு இருக்கும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக தீபன் இதில் வெள்ளையனின் தாயைப் பிரம்மாண்டமாக எழுப்பிக் காட்டியிருக்கிறார். வீட்டை விட்டுக் காதல் கணவருடன் படியிறங்கி வந்தவள். கணவன் பாராரியாய்ப் பரதேசம் போன பிறகு தனி மனுஷியாகக் குழந்தைகளை வளர்த்தவள். அவளது எளிய குடும்பத்தின் வழி ஈழத்தின் சமூக அமைப்பை தீபன் நாவலுக்குள் உருவாக்கிக் காட்டுகிறார். 

இன்னொரு புறமும் புலிகள், அந்தச் சமூகத்துக்குள் என்ன மாதிரியாகச் செயல்பட்டார்கள் என்பதையும் தீபன் சொல்கிறார். ஈழச் சமூகத்தில் அவர்கள் மனசாட்சியாகச் செயல்பட்டதாக இந்த நாவல் சித்தரிக்கிறது. பெயரளவில் கேள்விப்பட்டிருந்த தமிழிழக் காவல் துறை, தமிழீழ நீதிமன்றம் ஆகிய புலிகளின் ஆட்சி அமைப்பின் செயல்பாடுகள் நாவலுக்குள் கதையோட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன.

2009 போரைவிட ராணுவ அமைப்பாக புலிகள் மாறிய பிறகு நடத்தப்பட்ட ஆனையிரவு மீட்பு போர் குறித்துத் திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஓயாத அலைகள் மீட்பு நடவடிக்கையில் பங்குகொண்ட வீரன்தான் நாயகன். போர் முடிந்த சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வந்திருக்கும் எழுத்து இது.

சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம் போன்ற ஈழக் கவிஞர்களின் குரல் பின்னால் இலக்கியதில் தொடரவில்லை. அந்த விட்ட இடத்தில் தீபன் இப்போது தொடங்கியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

கவிஞர் என்ற நிலையில் இருந்து விவரிப்பு மொழிக்குப் பாரம் ஏற்ற தீபன் முயலவில்லை. எளிய கதையைச் சொல்வதற்குச் சிக்கல் இல்லாத மொழியை தீபன் தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்கு என்வாழ்த்துகள்

31.12.02018 அன்று சென்னையில் இடம்பெற்ற நடுகல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதன் சுருக்கம்.

-மண்குதிரை

வெள்ளி, 28 ஜூன், 2019

எளிய மக்களின் கதை!



நடுகல். ஒரு விடுதலைபோரின் பின்னணியில் வாழ்ந்த எளிய மக்களின் உணர்வுகளை உயிரோட்டமாகவும் உண்மையாகவும், எந்த பிம்பப்படுத்தலும், மிகைப்படுத்தலும் இல்லாமல் இரத்தமும் சதையுமாய் படிக்க நேர்ந்தது சிறந்த அனுபவமாயிருந்து. தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இயக்கத்தில் பிள்ளைகள் இருக்கும்போது தாய்மார்கள் படும் அல்லல். கடும்போர் சூழலிலும் சிறுவர்களின் கல்வியை பிரதானப்படுத்தும் போராளிகள்/ இயக்கம், அமைதி காலங்களில் ஈழ மக்களின் எளிய வாழ்க்கை முறை இவை யாவும் தமிழக இளையதலை முறையினருக்கு ஈழம் குறித்த புதிய பார்வையை இந்த நாவல் நிச்சயம் கொடுக்கும். 

நடுகல், தவிர்க்க கூடாத, முடியாத ஈழ இலக்கிய நூல்களில் ஒன்று.

தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்
-ஆரோக்கிய தாஸ்

புதன், 19 ஜூன், 2019

கதாபாத்திரங்களாக வரும் புகைப்படங்கள்!



அன்பின் தீபச்செல்வன் அண்ணா அவர்களுக்கு,

தற்போதுதான் 'நடுகல்' நாவல் படிக்க முடிந்தது. வினோதனின் குடும்பத்தையும், அவர்களின் சுற்றத்தையும் மையமாக கொண்டு கதை நகர்கிறது. ஆள் இல்லா இடங்களில் புகைப்படங்கள் மட்டுமே நினைவுகளை மீட்டுகின்றன. இந்த நாவலில் புகைப்படங்கள் கதாபாத்திரங்களாக வருகின்றன.

தமிழீழ உரிமை போரில் இலங்கை ஆமியின் கோர முகங்களையும், இயக்கம் மக்களுக்கு எவ்வாறு பங்காற்றியது, மக்கள் இயக்கத்திற்கு எவ்வாறு ஆதரவு தந்தனர் என பல விடயங்களை அறிய முடிந்தது.

மேலும் புத்தகத்தை படிக்கும்போது போர் சூழலில் தமிழீழ மக்கள் அனுபவித்த இன்னல்களை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது.

இலங்கை அரசு மக்களை கொன்றது மட்டுமில்லாமல் தமிழீழ உரிமைக்காக போராடிய வீரர்களை பயங்கரவாதிகள் என்பதும், மாவீரர் துயிலும் இல்லங்களைஅழித்தொழிப்பதும், போருக்கு பிந்தைய ஆக்கிரமிப்புகள் என இந்நாவல் இலங்கை பேரினவாதத்தை தோலுரித்து காட்டுகிறது.

'நடுகல்' நாவலை ஒரு வரலாற்று நூலாகவே நான் பார்க்கிறேன். வாழ்த்துகளும் நன்றியும் அண்ணா..

முனிராஜி
14-06-2019
சென்னை

செவ்வாய், 11 ஜூன், 2019

நடுகல் நாவலுக்கு இயல் விருது!


கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டு தோறும் வழங்கும் இயல் விருது விழாவில் நடுகல் நாவலுக்கு சிறந்த புனைகதைக்கான விருதினை வழங்கியுள்ளது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பணியும், இயல் விருதின் முக்கியத்துவமும் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்தது. நடுகல் நாவல், பேரழிவு நகரத்திலிருந்து மீண்டெழ விரும்புகின்ற ஒரு குழந்தையின் மனம் உறைந்த நாவல். எனது நாவலுக்கும் இலக்கியப் பயணத்திற்கும் பெரும் அங்கீகாரமாகவும் ஊக்கமாகவும் அமையும் இவ் விருதினை அளித்துள்ள இலக்கியத் தோட்டத்திற்கு அன்புமிக்க நன்றிகள்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுக் குறிப்பிலிருந்து.
“தான் பிறந்ததில் இருந்து இலங்கையில் நிகழ்ந்து வரும் இனக் கலவரமும் அதில் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் அடைந்த இழப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய நடுகல் என்கின்ற நாவல், அதன் சுய விவரணத் தன்மை காரணமாக ஒரு முக்கியமான ஆவணமாகிறது. அத்துடன் கிளிநொச்சி என்கின்ற ஒரு நகரத்தின் இயற்கை எழில் காட்சிகளையும் இனப் போர் அந்த நகரத்தின்மீது கட்டவிழத்துவிட்ட எண்ணற்ற அழிவுகளையும் அப்பாவி மக்கள் போரில் பட்ட இழப்புக்களையும் போர் முடிந்த பின்னரும் முடியாமல் தொடரும் அம் மக்களின் துயரங்களையும் ஆவணப்படுத்திய நடுகல் நாவலுக்காக 2018ஆம் ஆண்டின் புனைவுப் பரிசை தீபச்செல்வனுக்கு வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை கொள்கிறது. ”

வியாழன், 6 ஜூன், 2019

ஒரு குழந்தை சொல்லும் கதை!


எனக்கு பிடித்தமான என்னை பாதித்த நூல்களுக்கு விரிவான விமர்சனம் எழுதக்கூடியவன் நான். ஆனால் நடுகல் நூல் வெளியானதும் வாசித்தும் கூட நான் அதைப் பற்றி அப்போது எழுதவில்லை.
எழுதுடா என்றான் தீபன். தைரியம் இல்லடா என்றேன். தீபனுடைய அண்ணனின் ஏக்கத்தை நன்கு அறிவேன். இரவு நேரத்தில் அந்த நூலை படித்து தேம்பி தேம்பி அழுது, விமர்சனம் எழுத குறிப்பெடுக்க மீண்டும் வாசிக்க கூட எனக்கு தைரியம் வாய்க்கவில்லை.
பொதுவாக கதைகள் என்பது பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லக்கூடியது. ஆனால் இந்த நாவலில் ஒரு குழந்தை நமக்கு கதை சொல்லுகிறது. அதுவும் போர்சூழலில் அகப்பட்ட குழந்தை தன்னுடைய ஏக்கத்தை சொல்கிறது.
தீபச்செல்வனின் நடுகல் சிலப்பதிகாரம் போன்றது. சிலப்பதிகாரத்தில் புகார் காண்டம், மதுரை காண்டத்தோடு கதை முடிகிறது. அடுத்து வரும் வஞ்சி காண்டம் என்பது இளங்கோவின் அரசியல்.
அதுபோல நடுகலில் அண்ணன் வீரச்சாவோடு கதை முடிகிறது. அடுத்து எழுதிய ஐம்பது பக்கங்கள் தீபச்செல்வனின் அரசியல். இன்றைய சூழலில் தாம் யார் பக்கம் நின்று பேசுறோம் என்று சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அதற்காக அவன் கதை முடிந்து அந்த ஐம்பது பக்கங்களை எழுதி இருக்கிறான்.
இதை எழுதக்கூட மீண்டும் நூலை புரட்ட மனமும் தைரியமும் வரவில்லை. தீபச்செல்வன் அண்ணன், வெற்றி அக்கா, தமிழ்நதி அக்கா போன்றோர் தொடர்ந்தும் சோர்வடையாமல் எழுத வேண்டும்.

-சரவணகுமார் 

ஞாயிறு, 2 ஜூன், 2019

நடுகல்: ஒரு சிறுவனின் பார்வையில் ஈழமும் போரும்! அன்பரசி



தமிழீழ விடுதலைப்போராட்டக்களத்தில் ஆயுதங்கள் மௌனித்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலகட்டத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு என்பது தமிழ் இலக்கியப் பரப்பில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. போர்க்கால மற்றும் அதன் பின்னரான படைப்புகள் இன்று தமிழ் இலக்கிய அரங்குக்கு புதிய கதைகளை, முற்றிலும் வேறுபட்ட பிறிதொரு வாழ்வுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

தமிழகத்தமிழர்களுக்குக் கிடைக்காத, அவர்கள் வாழ்ந்தறியாத வாழ்வியலும் போராட்டமும் எம்முடையது. அவர்களது கற்பனையில் கூட எம் வாழ்வியலை உணர்ந்திட முடியாது என்பது மட்டுமல்ல. இலக்கியமாகக், கலையாகப் பிரதிபலித்து விடவும் முடியாது என்பதற்கு எம் வலி குறித்து இதுவரை வெளிவந்த அத்தனை இந்திய, தமிழகத்; திரைப்படங்களின் கோணல் பார்வையே சாட்சியாய் உள்ளது.

தனித்துவம் நிறைந்த எமது துயர வாழ்வியலானது கலை, இலக்கிய வடிவங்களைப் பெறவேண்டும் என்பது மட்டுமல்ல, அது அவ்வாழ்வை வாழ்ந்தனுபவித்த எம்மவர்களாலேயே கலை, இலக்கியப் பரப்புக்கு அறிமுகப்படுத்தப்படவும் வேண்டும். உலக அரங்கில் இவை முக்கியத்துவம் பெறவேண்டிய தேவையும் உண்டு. எம் விடுதலைப் போராட்டத்தின் நியாயமான தேவையை எடுத்தியம்ப இப்படைப்புகளினதும் எழுத்தாளர்களினதும் பணி மிக முக்கியமாகிறது. என்னைப் பொறுத்தவரை இது எமது படைப்பாளிகளது முக்கிய கடமையும் ஆகிறது.

அந்த வகையில் போர்ச்சூழல், அது ஏற்படுத்திய வடுக்கள், அதற்குப் பின்னரான வாழ்வியல் போன்றவற்றை அலசும் பல படைப்புகள் 2009 முதல் இன்றுவரை வெளிவந்துள்ளன. அவை குறிப்பாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தாயக மண்ணில் இருந்து சிங்களப்பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்தபடியே எமது தரப்பு நியாயங்களையும் பேசியவை என்று இதுவரை வெளிவந்த எதனையும் சொல்லிவிடமுடியாது.

தமிழர் தரப்பு நியாயங்களைப் பேச முடியாத இக்கட்டான சூழலில், அவற்றை விடுத்துப் பேசி விடுபடலைச் செய்வது முழுமையான படைப்பு ஆகாது. அப்படியான எழுத்து புனைவாக வந்தால் என்ன? நினைவுக்குறிப்பாக வந்தால் என்ன? அப்படி விடுபடல்களைச் செய்த படைப்புகள்தான் சில இதுவரை அங்கிருந்து வெளிவந்துள்ளன.

அவ்வகையில் இன்று இங்கு அறிமுகப்படுத்தப்படும் தம்பி தீபச்செல்வனின் நடுகல் நூல் தனித்துவம் பெறுகிறது. இந்த நூல் போரும் இடப்பெயர்வும் அலைக்கழிக்கும் காலகட்டத்தில் சிறுவனாக இருந்த கதைசொல்லியின் பார்வையில் போர், போராட்டம், அவை சார்ந்த நியாயப்பாடுகளை பேசுகிறது. 

ஒரு சிறுவனின் பார்வையில் எமது விடுதலைப்போராட்டம், போராளிகள், மக்கள், இராணுவம், விடுதலை, வீரம், பயம், இழப்பு என அனைத்தையும் பேசும் நடுகல் என்ற இந்த நூல் என்னைப் பொறுத்தவரை இதுவரை வெளிவந்த பிற படைப்புகளினின்றும் பரந்த வேறுபட்ட பார்வையை வாசகர்களுக்கு விரிக்கின்றது.

பதின்ம வயதுச் சகோதரனுக்கும் கதைசொல்லியான சிறுவயதுத் தம்பிக்குமான பாசப்பிணைப்பு, அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல்கள், இருவரும் தத்தம் குழந்தைமைப் பார்வையினூடே போர், போராட்டம் குறித்து வைக்கும் சிந்தனைகள் என்று பலவற்றை நிறைவாக இந்நூலில் பதிவு செய்துள்ளார் தீபச்செல்வன்.

அனுபவித்தபவர்கள் அனுபவக்குறிப்பாக எழுதுவது புனைவிலும் சிறந்தது என்பது என் கருத்து. வெளிநாடுகளில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களுக்கு இவ்வலியைப் புனைவாக எழுதாமல் நினைவுக்குறிப்பாகவே எழுதும் சுதந்திரம் உண்டு. ஆனால் தீபச்செல்வன் தாயகத்திலேயே இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர். அவர் இன்றும் அச்சுறுத்தல்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டே எழுதுபவர். அப்படியான சூழலில் வாழும் அவர் தன் மனவலியைப் பதிவு செய்வதற்குப் புனைவைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை. அவர் வாழும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு ஏற்புடையது அல்ல என்பது மட்டுமே இது புனைவு வடிவம் பெறுவதற்கு முக்கிய காரணியாய் அமைந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

நினைவு அழிப்பு, வரலாற்று மறைப்பு என்பதே சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் இன்றைய தமிழின அழிப்பு நிகழ்ச்சி நிரலில் முக்கியத்துவம் பெறுகிறது.

போர் நிறைவுக்கு வந்த பின்னும் ஆயிரக்கணக்கான கல்லறைகளை உடைத்துத் தூள் தூளாக்கி இருந்த இடம் இல்லாமல் செய்தது அப்படியான வன்ம வெறியின் வெளிப்பாடே.

மாவீரர் நாளில் மாவீரர்களை நினைவுகூரும் உரிமையைக் கூட மறுப்பதும் இதனாலேயே. எம் மண்ணுக்காய் மடிந்தவர்கள் பலரின் ஒளிப்படங்கள் கூட இல்லாமல் செய்ததும் இந்த நினைவு அழிப்பு அரசியலே.

மண்ணுக்காய் மடிந்த அவர்கள் முகங்களை மனத்திரையில் மட்டுமே மீண்டும் மீண்டும் ஓட்டி வேதனையோடு அல்லலுறும் பல குடும்பங்களின் இன்றைய நிலையைப் பேசுகிறது இந்நூல்.

தமது மாவீர உறவுகளின் ஒளிப்படங்கள்கூட இல்லாமல் எங்காவது எவரிடமாவது ஒன்றாவது இருந்துவிடாதா என்று மனதுக்குள் அங்கலாய்க்கும் ஆயிரமாயிரம் பெற்றோர், சகோதரங்கள், உறவுகளால் இந்த அலைக்கழிப்பை தமது அவலத்தை எழுதிவிடமுடியாது. அவர்கள் அனைவரதும் குரலாக ஒரு படைப்பாளி பேசியுள்ளான். அனுபவித்ததன் வேதனையை எழுத்துகளில் கொட்டி வடித்திருக்கிறான். அந்த வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது தீபச்செல்வனின் இந்த நடுகல்.

அடுத்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டங்களின் குறியீடாகவும் அப்போராட்டங்கள் குறித்த உலகின் பாராமுகம், அப்போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் உயிராபத்து, அச்சுறுத்தல்கள் ஆகியன குறித்துப் பேசும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ள ருக்குமணி என்ற தாயின் கதாபாத்திரம் இந்நூலில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ருக்குமணி என்ற கதாபாத்திரம் நான்கு பிள்ளைகளை மண்ணுக்காய் ஈந்த ஒரு தாய். மூவர் வீரச்சாவு. ஒரு மகன் காணாமல் ஆக்கப்பட்டவன். அந்தக் காணாமல் ஆக்கப்பட்ட மகனைச் சிங்கள அரசின் சிறைக்கைதிகள் நிகழ்வொன்று குறித்த பத்திரிகைச் செய்தியில் காண்கிறாள் தாய். தனது மகனைத் தன்னிடம் தாருங்கள் என்று போராடுகிறாள். அப்படி ஒருவன் தங்களிடம் இல்லவே இல்லை என்று மறுக்கும் இராணுவத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கிறது அவளது இப்போராட்டம். ஆனால் அவர்கள் அவள் மகனை ஒப்படைக்காமல் தங்களிடம் அவன் இல்லை என்றே சொல்லிவருகிறார்கள். அந்தச் சூழலில் ஒருநாள் அத்தாயின் உடல் அவள் வீட்டுக் கிணற்றில் இருந்து பிணமாக எடுக்கப்படுகிறது. இறப்பு வீட்டில் இராணுவத்தினர், போராடினால் என்ன நடக்கும் தெரியுமா? பாருங்கள் என்பதான நக்கல் பேச்சுத்தோரணையோடு நிற்கிறார்கள். அங்கு கிடத்தப்பட்ட தாய் ருக்குமணியின் உடல் குறித்து எழுத்தாளர் சொல்கிறார். 

'வெறுமை கவிந்திருந்த அந்தக் கூடாரத்தில் கலகலத்த அவளது குரல் கேட்குமாற்போலொரு பிரமை. குரல்கள். குரல்கள் எங்கும் செல்வதில்லை' உண்மைதான் அந்தக் குரல்கள் எங்கும் செல்வதில்லை. பேசாத பலரை, போராடாத பலரைக்கூட அந்தக் குரல்கள் தொடர்ந்து துன்புறுத்தும். அலைக்கழிக்கும். ருக்குமணியின் குரல் தீபச்செல்வனின் குரலாக இந்நூலில் ஒலித்துள்ளது.

இந்த மக்கள் போராட்டங்கள், அவற்றுக்கெதிரான அதிகாரத்தின் அச்சுறுத்தல்கள், இந்த அச்சுறுத்தல்கள் மக்களிடையே ஏற்படுத்தும் உணர்வலைகள் என்பன ஆழமாகப் பேசப்படவேண்டியவை. இந்நூலில் கூட இது குறித்துப் பேசிய பகுதி போதாது, அது இன்னும் நீண்டிருக்கலாம் என்றே தோன்றியது.

இந்நூலை வாசித்தபோது சிறுவர்களின் ஆழ்மனதில் எழும் போர் தொடர்பான எண்ணங்கள், அனுபவத்தின் வழி அவர்கள் கொண்ட எதிரி தொடர்பான பார்வை என்பன நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றே உணர்ந்தேன்.

ஒரு குழந்தையின் பார்வையில் தன்னையும் தன்னைச் சூழ்ந்தவர்களையும் கொல்ல வரும் விமானங்களின் கொடூரம் எப்படிப் பதிவாகியிருக்கும், அதற்கெதிரான அவர்களது எதிர்ப்புணர்வு எவ்வாறு பதிவு செய்யப்படும் என்பதை குழந்தையாகவே மாறி சிந்திக்கும்போது தீபச்செல்வனின் பாத்திரப்படைப்பும், சித்தரிப்பும் உணர்வோடு ஒன்றிப்போகிறது. அது சரியானதாக, நேர்மையானதாக மனதில் இடம்பிடிக்கிறது.

அதிலும் குழந்தைமை இழக்காத வயதில் உள்ள கதைசொல்லியின் பார்வையினின்று பதின்ம வயதினனான அவனது சகோதரனின் பார்வையில் இருக்கக்கூடிய நுண்ணிய வேறுபாடு சரிவரப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

'இப்படி செல் அடிக்கிறானே... வானம் உடையாதா?' என்று கேட்கும் குழந்தையாக இருந்த, பிறிதொரு நாளில் மண்ணுக்காக உயிரைக் கொடுக்கும் கார்த்திகா,

'உனது ரொட்டியைக் கொடுத்தால் அண்ணன் இயக்கத்துக்குப் போகமாட்டேன்' என்று அண்ணன் சொல்ல அதை அப்பாவியாய் நம்பும் தம்பி,

10 வயது தொடக்கம் தன்னை இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று இயக்கத்துக்கு ஓடுவதையும், பொறுப்பாளரால் திருப்பி அனுப்பப்படுவதையுமே வழக்காகக் கொண்ட, பெரிய ஆளாகி என்னவாக வர விருப்பம் என்று கேட்டால் இயக்கமாய் வரப்போறன் என்று ஆசிரியரிடம் சொல்லும் சிறுவனான அண்ணன் கதாபாத்திரம்,

'மாவீரர்களுக்காக அவையி;ன்ட அம்மா, அப்பா, தம்பி அழமாட்டினமே?' என்று கேட்கும் வினோதனின் குழந்தை மனம். 'அழுவினம்தான், ஆனால் அந்த அம்மா, அப்பா, தம்பியளோட எங்கட மண் எல்லாத்தையும் ஆமியிட்ட இருந்து காப்பாத்தத்தான் வீரச்சாவுகள்' என்று புரிந்துவைத்திருக்கும் அண்ணன் கதாபாத்திரம்,

இப்படி வேறுபட்ட வயதுக் குழந்தைகளின் பார்வையில் ஏற்படும் மாற்றங்கள், உணர்வுகள் குறித்துப் பேசுகிறது நடுகல்.

இயக்கப்பாடல்களையே வாய் எப்போதுமாய் முணுமுணுக்கும் வாழ்வியலைப் பெற்ற தலைமுறை அது. போரும் போர் சார்ந்த வாழ்வும் வாழ்வாகிப்போன இந்தத் தலைமுறையினர் விமானங்களைத் தம்மால் கல் எறிந்து வீழ்த்திவிடமுடியாது என்பது நன்றாகத் தெரிந்தாலும் குண்டுபோடும் விமானங்களை நோக்கிக் கல் எறிகிறார்கள். இதனைக் கதைசொல்லியின் அண்ணா செய்கிறான். இது அவர்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடே.

குழந்தைகள் என்போர் 'மாதிரி நடித்தல்' அதாவது pசநவநனெ pடயல என்பதை விரும்புவார்கள், அப்படியானதே இந்தக் கல்லெடுத்து எறிதலும். உண்மையில் சட்டி பானை வைத்து சமைத்து விளையாடுவதில்லை குழந்தைகள், ஆமி-இயக்கம் விளையாட்டு என்று உண்மையில் துப்பாக்கிச் சண்டை நடத்துவதில்லை, கள்ளன் போலிஸ் விளையாட்டும் இப்படித்தான். இது ஒருவகை pசநவநனெ pடயல அவர்களுக்கு. அதுபோலத்தான் இந்த விமானத்தை நோக்கிக் கல்லெறிதலும்.

பள்ளிக்கூடங்கள் மீதுகூட விமானக்குண்டுத்தாக்குதல் நடத்தி தம் கண்முன்னே பல குழந்தைகள் உடல்சிதறிப்பலியாவதைப் பார்க்கும் அவலத்தைக் கொடுத்த எதிரி மீதான தமது வெறுப்புணர்வைக் காட்டும் வெளிப்பாடே அது.

செல்லடியில் நாள்தோறும் பயந்து நடுங்கி, சதைப்பிண்டங்களாக சக மனிதர்களைப் பார்த்துப் பழகிய குழந்தை மனங்களில் கிளம்பும் இயற்கையான எதிர்ப்புணர்வின் தாக்கம் அது.

அதை அந்தச்சூழலில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளான குழந்தைகளின் மனக்கொதிப்பாகப் பார்ப்பதே சரி. அதை விடுத்து விமானத்தை நோக்கிக் கல்லெறிவார்களாம், இதெல்லாம் நடந்ததா? இது நம்பும்படியான எழுத்தா என்று கேலிக்குள்ளாக்குவது தாங்கள் அறிவாளிகள் என்று காட்ட முனைவோரின் அறிவிலித்தனம் என்று நாம் புறந்தள்ளுவதே சிறப்பு.

ஒவ்வொரு நாவலின் கருவுக்கும், கதைக்களத்துக்கும், பாத்திரப்படைப்புக்கும் பின்னால் ஒரு நியாயமான பார்வை அவசியம். அந்தப் பார்வையினூடே கதைக்களத்திற்கும், கதாபாத்திரங்களுக்கும் உரிய நேர்மையான பங்களிப்பைச் செய்யவேண்டும். அந்தப் பார்வையோடு படைக்கப்படும் எந்த ஒரு படைப்பும் அழகியல் நிறைந்ததுதான். அதை விடுத்துத் தனியாக அழகியல் என்ற ஒரு சோடிப்பு படைப்புக்குத் தேவையில்லை. குழந்தை மனங்களின் தெளிவான, நேர்மையான பிரதிபலிப்பே இப்படைப்பில் இலக்கியத்திற்கான அழகியலாக வடிவம் பெற்றுள்ளது என்று நான் நினைக்கிறேன். இதைத் தவிர்த்ததான அழகியல் இப்படைப்புக்குத் தேவையும் அற்றது என்பது என் பார்வையாகிறது.

இடப்பெயர்வே நிதர்சனமான போராட்ட வாழ்வில் கல்வி மறுக்கப்படுவதும் வாழ்வியலாகிறது. அந்த வகையில் கல்வி கற்றலுக்கான சூழல் மறுக்கப்படுவதானது குழந்தையின் மனநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இந்நூல் பேசுகிறது.

இடம்பெயர்ந்து பல நாட்கள், மாதங்கள் ஆன சூழலில் பள்ளிக்கூடத்தையே மறந்த குழந்தைகள், உயிர்காக்க வேண்டிய கட்டாயத்தினால் படிப்பின் ஆசை இல்லாதுபோன குழந்தைகள், பள்ளிக்கூடங்களே அகதி முகாம்கள் ஆனதால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்ட படிப்பு, விமானக்குண்டுவீச்சுக்கு இலக்காகும் பள்ளிகளும், அதனால் கண்முன்னே உடல் சிதறிப் பலியாகும் சக குழந்தைகளைப் பார்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் எனப் பல்வேறு வழிகளிலும் கல்வி மறுக்கப்படும் துயர சூழலைப்பேசுகிறது நடுகல். 

இயற்கைக்கும், விலங்குகளுக்கும் போர் ஏற்படுத்திய வடுக்களும் இழப்புகளும் மனிதர்களுக்கு நிகழ்ந்ததிலும் கொடூரமானது. அதுகுறித்தும் பேசுகிறது நடுகல்.

எழுத்தாளர் அடிப்படையில் ஒரு கவிஞர். ஆகையால் விவரிப்புகள் அவருக்கு இயல்பாகவே அழகாக வருகிறது. அது போதுமானது. ஆனாலும் விவரிப்புகளைக் கொண்டு எழுத்தாளர் கட்டி எழுப்ப முயன்றிருக்கும் படிமங்கள் மனதில் பெரிதாக ஒட்டவில்லை.

இருக்க கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் மினக்கெட்டு சீர்படுத்தியிருக்கலாம். கதாபாத்திரங்களின் அறிமுகம் ஆழமாய் மனதில் பதியவில்லை. மீண்டும் மீண்டும் சில பக்கங்களைத் திருப்பி யார் இவர், யார் அவர் என்று சரிபார்த்துக் குழம்ப வைக்கும் மனநிலையை வாசகர்களுக்குத் தராமல் இருந்திருக்கலாம். அது வாசிப்பில் தொய்வையும் சோர்வையுமே உண்டுபண்ணியது.

தீபச்செல்வன் பார்த்த, அனுபவித்த கேட்ட கதைகள் இன்னும் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றை இலக்கிய வடிவமாக்கும் ஆற்றல் தீபனுக்கு உண்டு. நடுகல் என்ற இந்த நாவல் அதறகான முதல் முயற்சி. மேலும் பல படைப்புகளுக்கான முன்னோட்டம். இன அச்சுறுத்தலுக்கு நடுவே வாழ்ந்துகொண்டு படைப்பிலக்கியத்தை வெளிக்கொணர்தல் என்பது பெரும் சவால்தான். ஆனாலும் உலகுக்குக் கேட்காத, நசுக்கப்பட்ட மக்களின் குரலாக தீபனின் எழுத்துக்கள் ஏதோவொரு வடிவம் பெறவேண்டும்.

சிலர் உங்களைத் தரம் தாழ்த்தி சிறுமைப்படுத்துகிறார்கள், கேலிக்குள்ளாக்குகிறார்கள் என்றால் அது நீங்கள் உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம். அவற்றைப் புறந்தள்ளி செயற்படுதலே சிறப்பு.

எதிரியும் ஏகாதிபத்தியங்களும், சமூக வலைத்தளங்களை உள்ளடக்கிய கோப்பரேட்களும் என்னதான் தலைகீழாக நின்றாலும் எம் போராளிகள், எம் போராட்டம் குறித்த அவர்களது நினைவு அழிப்பு நடவடிக்கைகளும், வரலாற்று மறைப்பும் அவற்றுக்காக ஏவப்படும் அதிகார அரசியல் வன்முறையும் எமது விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தை அழித்துவிட முடியாது. பத்தாண்டுகள் கடந்துபோயிற்று. ஆனாலும் கொத்துக்கொத்தாய் எம் மக்கள் கொல்லப்பட என்ன செய்வது, ஏது செய்வதென்றறியாது பரிதவித்துப் பதைபதைத்துக் கண்ணீருடன் கடந்த அந்த நாட்களின் வடுக்களும் வலியும் இன்னும் ஆறவில்லை. வன்மம் சிறிதும் அடங்கவில்லை. எதிரியும் ஏகாதிபத்தியங்களும் எது செய்தும் அழிக்கமுடியாத காலத்தின் பதிவாய் அது ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் இன்றும் கனன்றபடிதான் உள்ளது.

அந்த வகையில், இறுதியாகக் கதைசொல்லியின் அண்ணா குறித்து கதைசொல்லியின் நண்பனான அன்பழகன் சொன்னதையே வாசித்து தீபச்செல்வனுக்கும் நம் அனைவருக்குமான ஆறுதலாக, வேண்டுதலாக அதனை எடுக்கலாம் என நினைக்கிறேன்

'உன்ரை அண்ணா உனக்குப் பக்கத்திலை, உனக்குள்ள, உங்கட அம்மாவுக்குள்ளை இருக்கிறான். அவனின்ர வீரச்சாவுதான் உன்னைப் படிக்கத் தூண்டினது. அதுதான் உங்கட வீட்டின்ர வறுமையை நீக்கினது. அதுதான் உன்னை ஒரு புகைப்பட ஊடகவியலாளன் ஆக்கினது. இறந்த பிறகும் உன்ர அண்ணா வாழுறான். அவன் உங்கட எல்லா வளர்ச்சியிலயும் இருக்கிறான். ஒரு மாவீரனுக்கு மரணமில்லை. அவயின்ர மரணம் மகத்துவமானது. அவயின்ர கனவு வீண்போகாது'
கடந்த 26.05.2019 அன்று கனடா நாட்டில் இடம்பெற்ற 'நடுகல்' நூல் வெளியீட்டு விழாவில் விமர்சகர் அன்பரசி  (Anbarasy Singam) ஆற்றிய ஆய்வுரை.

சனி, 1 ஜூன், 2019

துயரத்திற்கான பிரதியில்லை! சஜித் அகமட்


தீபச்செல்வனின் நடுகல் நாவலினை வாசிக்க கிடைத்தது. கிளிநொச்சி எனும் யுத்த பிரகடன தேசத்திலிருந்து போரினை பாடிச் சென்றிருக்கிறார். முப்பது வருட காலம் இலங்கையின் சமத்துவத்தினை ஆட்டிப்படைத்த கோர நினைவுகளின் பரிதாபமாய் விரிந்து நிற்கிறது நடுகல். பிரதி எனும் வகைப்பாட்டினில் வைத்து வாசிக்க முற்படுவதா அல்லது நினைவேடாக ஊடறுப்பதா என்பதில் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது தீபாவின் சொற்கள். புனைவு வழிப்பிரதியாக சொல்லப்படுகின்ற துன்பியல் வாழ்வினை பிரச்சார தொனியுடன் கடந்து செல்கிறது படைப்பு. 

விடுதலை புலிகளின் போராட்டத்தில் மடிந்து போன மக்களை பேசுவதை விடவும், போராளிகளுக்கு அதிக இடத்தினை வழங்கியிருக்கிறது நாவல். ஆயினும் போருக்கு பின்னராக மாண்டு போன உயிர் மீதான காதலை வெளிப்படுத்தும் அம்மாவின் கண்ணீரும், தம்பியின் நினைவுகளும் சோகப் பிரதியாக நடுகல்லினை நுகர வைத்திருக்கிறது. 

தீபச்செல்வன் கவிதைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட செயற்பாட்டாளனாக இருப்பதால் நாவலில் மேவி வரும் வர்ணனைகள் சில இடங்களில் அலுப்படிக்கச் செய்கிறது. யுத்த சூழலினை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவந்த நாவல்களின் வருகை யாழ்ப்பாணத்து சூழலில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களின் ஆன்மா இங்கிருக்கும் போரினை அலசல் புலசலாக எழுதியதை ஜீரணித்து முழுங்கியவர்கள் ஏராளம். இந்த புள்ளியிலிருந்துதான் போராட்டம் பேசும் இலக்கியங்கள் சோம்பலை தரத் தொடங்கின.

தானே கதை சொல்லியாக தனது நினைவுகளை பகிர்வது போன்ற தோரணையில் நடுகல் வாழ்வின் துயரத்தை பாடுகிறது. யுத்தம் என்பதே துன்பியலின் அறிகுறிதான். ஆனாலும் பிரதி வடிவத்தில் சொல்கின்ற போது அதற்கான விசித்திர வடிவத்தின் செம்மைகளை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. போரில் இறந்து போன மாவீரன் ஒருவனை சுற்றி நிகழ்த்தப்படும் கதையில் பல ஜீவன்கள் உணர்வற்று மாய்ந்து போகும் பாத்திரங்களாக மாற்றம் கொள்கின்றன. 

மைய கருத்தின் அடிப்படையில் ஒரு பாத்திர வார்ப்பினை இலக்காக கொண்டு ஒட்டுமொத்த யுத்த பரப்பின் சிறு புல்லினை அலசியிருக்கிறார் தீபச்செல்வன். வரலாறு எப்பொழுதும் தோதுக்கு எழுதப்படுபவை எனும் நம்பிக்கையின் மீது கட்டுடைப்பினை நிகழ்த்துகிறது நடுகல்.

போருக்கு பின்னரான காலப்பிரதிகள் கற்பனை வளத்தினை அதிகமதிகம் சேகரித்துக் கொண்டு மிதமிஞ்சிய உசுப்பலினை ஏற்படுத்தின. நடுகல் பிரதிக்கான துயரம். ஆனால் துயரத்திற்கான பிரதியில்லை.

-சஜித் அகமட்


வெள்ளி, 31 மே, 2019

வினோதன் பேசுகிறான்! கவிஞர் பிறைமதி



ஒரு மிகப்பெரிய வாழ்வியலை, 200 பக்கங்களில் அடக்குவது எவ்வளவு சிரமமானது...?
வினோதன் பேசுகிறான். அவனின் வாழ்க்கை, அண்ணன் மீதும் தங்கையின் மீதும் கொண்ட அன்பு, அம்மாவின் மீது வைத்த காதல், அப்பா எனும் பிம்பத்தில் ஒளிந்து கிடந்த அப்பழுக்கற்ற எதிர்பார்ப்பு மற்றும் காதல், போர், இனப்படுகொலை, நிலம், வாழ்விட மாற்றங்கள், உதனை சுற்றிய சோகம், வலி, வேதனை............. இவைகளை மையப்படுத்தியே கதை நகர்கிறது.
ஒவ்வொரு அத்தியாயம் துவங்கும்போதும் ஈழத்தின் அழகு, பூக்கள், மரங்கள், பறவைகள் என அதன் இயற்கை சார்ந்த அழகியலை நம்மோடு பகிர்ந்துகொண்டே கதையை துவங்குகிறார்.
அப்பாவின் மீது கொண்ட அன்பும் ஏக்கமும் அண்ணனின் மீது வினோதனுக்கு தெரியாமலேயே அளவற்று பாய்கிறது.
கிளிநொச்சியில் அடிக்கடி நடக்கும் குண்டு வீச்சுகளால் இடம்பெயர்ந்து சென்று வாழ்வது மீண்டும் அதே இடத்தை தேடி வருவதெல்லாம் கண்ணீரை வரவழைக்கும் இடங்கள். குண்டு வீச்சுக்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறுவது, முக்கியமான பொருள்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு மீதியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியேறுவதெல்லாம் சோகம் நிறைந்த இடங்கள். மீண்டும் வந்த அவர்கள் வாழ்ந்த வீட்டை வந்தடையும்போது காடு மண்டி, அதன் சுவடுகளை இழந்து வெற்றுடம்புடன் நிற்கும் கிராமம்....
மாடுகளும் நாய்களும் புறாக்களும் பயணத்தில் கூடவே வந்து உயிரிழக்கும் இடங்கள் பேரதிர்ச்சியின் உச்சம்.
அண்ணன் இயக்கத்தில் சேர்ந்து, இடையில் வந்தபோது நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் அவ்வளவு வழிகளோடே நம்மால் நகர முடிகிறது. அடுத்த சந்திப்பு நிகழ்வதற்குள் வீரச்சாவடைந்து சடலமாக வீடு வந்தடையும்போது நமக்கும் அழ தோன்றுகிறது.
மூன்று குழந்தைகளை இயக்கத்திற்கு அனுப்பி சுதந்திர காற்றை சுவாசிக்க துடிக்கும் இன்னொடு அம்மாவை கடவுளென என் மனம் நினைக்கிறது. அவளின் வீரம், அவளின் பேச்சுகள் யாவும் இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.....
முள்வேலி, முள்வேலி சந்திப்புகள், வினோதனின் படிப்பு, பிரிவு, கந்தக காற்று, குண்டு சத்தம், வானொலியில் 9 மணிக்கு ஒலிபரப்பாகும் வீரர்களின் மரண செய்தி, மாவீரர்களின் சமாதி, படுகொலைகள், வயிறு கிழிந்து குடல் சரிந்து கிடைக்கும் மனிதர்கள், புகைப்படம் தேடி அலையும் தம்பியின் பயணம், என நம்மை கடந்து செல்லும் பக்கங்கள் , ஒருவிதமான அச்சத்தை தந்து கைகளை நடுங்க செய்கிறது.............................................
" நல்லா இருக்கியளா? அழக்கூடாது! எங்கடை சனத்துக்காகப் போராடுறதுதான் எனக்கு பிடிச்சிருக்குது. நீங்கள் சந்திசமாய் இருக்க வேணும்" அம்மாவின் கலங்கிய விழிகளைத் துடைத்துபடி சொன்னான்....
' இந்த சண்டை எல்லாம் எப்ப முடியும்? நாங்கள் எல்லாரும் எங்கடை வீடுகளிலை ஒண்டாய் வாழுற காலம் எப்ப வரும்?'
" கெதியிலே இந்த சண்டையள் முடியும். எங்களுக்கு ஒரு விடிவு வரும். விடுதலையடைஞ்ச தமிழீழத்திலை எங்கடை மக்கள் எல்லாம் நம்மதியாய் இருப்பினும்"
பேருந்து வேகமாக விரைந்தது. அவன் இறங்கி வருவானென அப்போதும் நம்பிக்கொண்டிருந்தது மனம். ஏமாற்றம்தான். அவன் வரவில்லை. பேருந்து மறையத் தொடங்கியது.
அழுதபடி ஒருத்தி முட்கம்பிகளுக்குள்ளால் வெளியே கையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். அவளின் கையில் இருக்கும் குழந்தையும் முட்கம்பிகளுக்குள் கைய நீட்டியது. பிச்சைக்காரர்களே இல்லாத நிலத்தின் சனங்கள் கையேந்தும்படியாய் அடைக்கப்பட்டார்கள்.
"எங்கடை பிள்ளையளின்ரை நினைவுகளை நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களால் அவங்களை அழிக்கேலாது....."
"எங்கடை பிள்ளையனை உங்களாலை இல்லாமல் செய்யவும் ஏலாது. எங்கடை பிள்ளையளின்டை கனவை உங்களாலை அழிக்கவும் ஏலாது....."
எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இப்படி பிரச்சினைகளா......?
ஆனால் ஈழத்தில் மட்டும் ஏன்...? தனக்கான மண்ணை, இது என்னுடைய மண் என்று போராடும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே...?

புலிகளின் தாகம்.... தமிழீழ தாயகம்.......

( நாவலை அறிமுகம் செய்த தோழர் செந்தில் வரதவேலுஅவர்களுக்கு நன்றி)

கவிஞர் பிறைமதி, பார்வேட்டை என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர். 

சனி, 25 மே, 2019

நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு!


கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று  உலகின்  பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருவது அண்மையில் நடந்துவரும் அதிசயம்.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பொன்னைய்யா விவேகானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கந்தசாமி கங்கதரனும் தீபச்செல்வன் குறித்த அறிமுகத்தை இயக்குனர் ரஞ்சித் யோசப்பும் வழங்கவுள்ளனர்.

நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் ரதனும் வழங்கவுள்ளார். அத்துடன் நடுகல் பெறுமானம் என்ற தலைப்பில் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் ஆய்வு ஒன்றினை நிகழ்த்தவுள்ளார். மேலும் ஆய்வுரைகளை  ஈழக் கலைஞர் மேர்லின் மற்றும் அன்பு ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். நூலினை ஈழத்துக் கவிஞர் சா.வே. பஞ்சாட்சரம் வெளியிட்டு வைக்க கவிஞர் தீபச்செல்வனின் ஏற்புரையும் இடம்பெறவுள்ளது.

ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வனின், முதல் நாவலான நடுகல் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு காணும் நடுகல் நாவலுக்கு சிறப்பான வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஈழப் போரில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பி இடையிலான வாழ்வும், போராட்டத்திற்கு செல்லும் அண்ணனின் நினைவுகள் மீதான தம்பியின் தேடலாகவும் அமையும் கதையைக் கொண்ட இந் நாவல், தமிழீழ தேசம் எப்படியிருந்தது என்பதை பேசுகின்றது.


பிரான்ஸ் மற்றும் இலண்டனில் இந்த நாவலின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில், சுவிஸ், டொன்மார் மற்றும் அவுஸ்ரேலியாவிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ்வின் https://bit.ly/2MbHXIs

செவ்வாய், 21 மே, 2019

நடுகல்: நானிழந்த சுதந்திரம்! நான் விதைத்த கண்ணீர்!! நிலவிந்தன்


"காத்துக்கு விளக்கு நூரப் போகுது! சுளகை வடிவாய்ப் பிடி" என்ற ஆரம்பத்தோடு கதை நகரும். எதிர்வரும் காலங்களில் உண்மையான ஈழ வரலாறு அழிக்கப்படலாம், மறைக்கப்படலாம் "ஈழம்" பற்றி உண்மையான ஈழப்போராட்ட வலிகள் பற்றி, போர்குற்றங்கள் பற்றி "நடுகல்" விபரித்து சொல்கிறது. ஈழம் பற்றி ஆராய விரும்புபவர்களுக்கு முக்கிய மூலாதாரமாக "நடுகல்" இருக்கும்.
வன்னி நிலத்தின் அழகியலையும், வாழ்வியலையும் தன் எழுத்துகளால் வாசிப்பவர்களை வன்னி மண்ணை நேசிக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர் தீபச்செல்வன். குறிப்பாக கிளிநொச்சியை. தன் சொந்த நிலத்தில் விடுதலை இன்றி சுதந்திரம் பறிக்கப்பட்டு வாழும் நம் இனத்தின் துயரங்களையும், வலிகளையும், ஏக்கங்களையும் நாவலில் சொல்லி கண்களை கலங்கடித்துவிட்டார்.
அண்ணாவுக்கு ஒண்டும் நடந்திருக்காது... தங்கையும், தம்பியும் அம்மாவும் காத்துருக்க நிலத்தின் மீதும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் களமாடி அண்ணா வீரச்சாவு வாசிக்கும் கனம் கண்ணீர் நிரம்பிய கண்கள் அண்ணா வந்து விடுவான் அண்ணா எல்லாமாவும் இருக்கிறான். அண்ணாவுக்காக கண்ணீருடன் காந்திருந்த அம்மாவுக்கு! "அண்ணவின் வித்துடல்" கதை அண்ணாவின் நினைவுகளுடனே நகர்ந்து செல்லும் நிலையில் "அண்ணா" துயரத்திலிருந்து இன்னும் மீள விடவில்லை.

அண்ணாவின் புகைப்படங்கள் போராட்டகாலங்களில் அழிந்தவிட்டாதால் அண்ணாவின் முகத்தை பார்க்க புகைப்படத்திற்கான தேடல்களும், மாவீரர் துயிலும் இல்லங்கள் கல்லறைகள் அழிக்கப்பட்டு அண்ணாவின் ஞாபகமாக அம்மா வைத்திருந்த கல்லும் அண்ணாவின் ஞாபகமாக இருந்த நடுகல்லையும் விட்டுவைக்கவில்லை. துயரம் மேலும் வலுப்பெற்றது.

முப்பது வருட ஆயதப்போராட்டத்தின் முடிவின் பின்னர் தமிழ் மக்களின் விடுதலையையும், பண்பாட்டுதளத்தையும் அரசியல் ரீதியாக நகர்ந்த வேண்டும் என்பதேயே "வினோதன்" கதாப்பாத்திரத்தினூடாக சொல்லப்படுகிறது.
"உன்ரை அண்ணா உனக்குள்ள உனக்கு பக்கத்திலை,உங்கட அம்மாவுக்குள்ள இருக்கிறான். அவனின்ரை வீரச்சாவுதான் உன்ன படிக்க தூண்டினது. அதுதான் உங்கடை வறுமையை நீக்கினது. அதுதான் உன்னை ஒரு புகைப்பட ஊடகவியலாளரா ஆக்கினது. இறந்த பிறகும் உன்ரை அண்ணா வாழுறான். அவன் உங்கட எல்லா வளர்ச்சிலையும் இருக்கிறான். ஒரு மாவீரனுக்கு மரணமில்லை. அவையின்ரை மரணம் மகத்துவமானது! அவையின்டை கனவு வீண் போகாது..."
பசியின் வாட்டத்தாலும், நோய்களின் பிடிகளிலும் அகப்பட்டு தன் தோட்டத்தில் விளைந்த உணவுகளை உண்ணாமல் பசியில் மரணத்தின் கடைசி தூரத்திற்க்கு சென்று வந்த மக்களை, இடப்பெயர்ந்து கலைத்து போன மக்களை குண்டுகளும் கொன்றழித்தது. சுதந்திரமாக வாழ்ந்த அந்த மண்ணில் "இரத்தவாடை" கடைசியில் முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்று முள்வேலி முகாம்களின் சித்திரவதை, துன்பங்களையும் "நடுகல்"  நாவல் சொல்லுகிறது.

நான் வாழ்ந்த மண்ணில் நான் பட்ட துயரங்களயும், நான் இழந்த உடமைகளையும் நான் இழந்த எனது உறவையும், நான் இழந்த சுதந்திரத்தையும், நான் கண்ணீர் விதைத்த மண்ணையும், கட்டிக்காத்த வாழ்வியலையும் "தீபசெல்வன்" அவர் கண் கலங்க மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறார். "நடுகல்" கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூட இல்லை, என்னோடு எனது வரலாறு எனது கையில் இருக்கும் என்று நினைக்கவில்லை. 

"தீபச்செல்வன்" அவர்கள் தமிழ்மொழிமீதும்,தமிழ் இனத்தின் மீதும் கொண்ட அன்பும், ஈடுபாடும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. நாவல் பாதுகாக்கப்படும் பின்வருகின்ற சந்ததிக்கு ஒப்படைக்கப்படும்.

ஞாயிறு, 19 மே, 2019

பறவைகளை நேசிக்கும் சிறுவன்! சுகிர்தா சண்முகநாதன்



நடுகல் விமர்சனம்

விநோதன்

இவன் தன் அண்ணாவையும், அம்மாவையும், தங்கையையும் மட்டும் நேசிக்கவில்லை. இவன் இயற்கையின் காதலன். குருவிகளையும், விலங்குளையும், இயற்கையையும் நேசிக்கின்றான். இயற்கையை நேசிப்பதாலேயே அவன் உள்ளங்களை நேசிக்கின்றான்.


வினோதனின் வாழ்வில் அரைவாசியை நானும் வாழ்ந்துள்ளேன் என்பதால் என் கடந்தகாலமும் வாசிப்பினூடே மீட்டப்படுகிறது. அவனாகவே நானும் வாழ்ந்தேன்.

அவன் அம்மா ஒவ்வொரு முகாமாகத் தன் மகனைத் தேடி அலைந்தபோது நானும் அவளைத் தேடி வீதியில் காத்திருந்தேன்.

அவன் தன் அண்ணாவின் புகைப்படத்தைத் தொலைத்தபோது நானும் எம் வீட்டிலிருந்த மாவீரர்களின் படங்களை இடப்பெயர்வின் போது வாகனத்தில் வந்த காயப்பட்ட போராளிகளிடம் ஒப்படைத்த நினைவுகள்....

கதையில் பல குறியீட்டுச் சம்பவங்களையும் உரையாடல்களையும் விதைத்துச் செல்வதனூடாக எம் மனச்சாட்சியை மீண்டும் மீண்டும் உலுக்கிச் செல்கிறார். அத்தனை குறியீடுகளும் மாண்டுபோன எம் மக்களின் சாட்சியங்களாக!

ருக்குமணி

"அவள் காணாமல் போகச்செய்யப்பட்ட பிள்ளைகளுக்காய் போராடும் தாய்மாரின் குறியீடு ஆனாள்.

படுக்கை விரிக்கப்பட்டபடி இருந்தது. அருகில் கைபேசியும் வெற்றிலைப் பையும் இருந்தன. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட அவளது சடலத்தில் பழுத்தபிலா இலைகள் ஒட்டியிருந்தன. வெறுமை கவிந்திருந்த அந்தக் கூடாரத்தில் கலகலத்த அவளது குரல் கேட்குமாப்போலொரு பிரமை. குரல்கள் எங்கும் செல்வதில்லை."

மறக்கவிரும்பும் நிகழ்வுகளையும், நினைவுப்பெட்டகத்தில் பாதுகாக்கும் பல மறக்கமுடியாத பல நினைவுகளையும் விரும்பியும் விரும்பாமலும் மீட்டியபடியே கடக்கிறேன்!

இறுதிப்போரில் பின் முகாம்களில் அடைக்கப்பட்ட காலங்களை நான் அனுபவிக்காவிட்டாலும் இங்கிருந்துகொண்டு நாம் பட்ட வலியும் வேதனையும் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை. இந்த இடத்தில் அவள் சொன்ன வார்த்தைகளை இன்று நினைத்தாலும் உயிர்போகிறது. "எனக்கு ஒன்று நடந்தால் என் பிள்ளைகளுக்கு நீதான் பொறுப்பு" ஓர் அன்னையால் இவ்வாறு சொல்ல முடியுமென்றால் அவளின் நிலை எத்தகையது?

"முட்கம்பிகள் மாத்திரம் வாதை தருவதல்ல. முள்வேலி முகாமின் காற்றும் வாதைதான். தண்ணீரும் வாதை தான், உணவும் வாதைதான், கூடாரங்களும் வாதைதான், முள்வேலி முகாமின் அறிவிப்பும் வாதைதான். அங்குள்ள வைத்தியசாலைகளும் நிரம்பிய மலக்குழிகளும் வாதை தான்"

சிறுவர்களின் உலகத்தில் எந்தவித போலித்தனமும் இருப்பதில்லை. வாழ்வை அதன் போக்கில் வாழவும், தம் கண்முன்னே விரியும் உலகின் கண்ணாடியாய் தம்மை இனங்காட்டவும் அவர்கள் தயங்குவதே இல்லை.

"ஆனால் உன்ர அண்ணா உனக்குப் பக்கத்திலை , உனக்குள்ள உங்கடை அம்மாவுக்குள்ளை இருக்கிறான். அவனின்ர வீரச்சாவு தான் உன்னைப் படிக்கத் தூண்டினது. அதுதான் உங்கடை வீட்டின்ரை வறுமையை நீக்கினது. அதுதான் உன்னை ஒரு புகைப்பட ஊடகவியலாளன் ஆக்கினது. இறந்த பிறகும் உன்ரை அண்ணா வாழுறான். அவன் உங்கடை எல்லா வளர்ச்சியிலையும் இருக்கிறான். ஒரு மாவீரனுக்கு மரணம் இல்லை. அவையின்ர மரணம் மகத்துவமானது. அவையின்டை கனவு வீண்போகாது வினோதன் " இதுதான் எங்கள் பலம்!

எந்தவித எதிர்பார்புகளுமற்று நேசிக்கத்தெரிந்த உன்னதமானவர்களைப் பார்த்து வளர்தவளாக வினோதனைப் போலவே நானும்!

-சுகிர்தா சண்முகநாதன்

சனி, 18 மே, 2019

தஞ்சையில் நடுகல் நாவல் கலந்துரையாடல்!



பத்துவருடத்து கொடுங்கனவை பற்றியும் அந்த கனவின் வலியை சுமந்து நின்றுக்கொண்டிருக்கிற ஓர் படைப்பை பற்றியும் நினைவுக்கூறுவதற்கும் பேசுவதற்கும் நிறைய இருக்கிறது. வாய்ப்பிருக்கக் கூடிய தோழர்கள் நண்பர்கள் உறவினர்கள் தஞ்சை சுற்று வட்டாரப் பகுதி மக்கள் என அனைவரும் வருக..!
வரும் 26 ஆம் தேதியன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் ஈழக் கனவுக்காக நடுகல்லாகி துயில்வோரை நினைவுக் கூறுவதற்கும் தீபச்செல்வனின் 'நடுகல்' நாவல் குறித்து கலந்துரையாடுவதற்கும் நண்பர்களே! தோழர்களே! தயாராகுங்கள்.
-தினேஷ் பழனி ராஜ்


'நடுகல்' நாவலில் இருந்து


“நாங்கள் மெனிக்பாம் முகாமுக்கு வந்து சேரக்குள்ளை குறை உயிரோடை வந்ததைப் போலத்தான் இருந்தது. ஒருநாள் முழுக்க பஸ்ஸிலை எங்கை எங்கையோ எல்லாம் கொண்டுபோயிட்டு பிறகு கொண்டு வந்து இறக்கினாங்கள். வந்ததும் வெறும் நிலத்திலை விழுந்து கிடந்தன். அப்பிடிக் களைப்பு ”

அக்கொடிய நாட்களின் கதையை சொல்லும் அம்மாவின் முகத்தில் முடிவற்ற அலைச்சல். கந்தக நெடில். பேராறாய் குருதி. விழிகளில் லட்சம் பிணங்கள். 

“கிளிநொச்சியிலை எறிகணைகள் வந்து விழத்தொடங்கின ஒருநாளில் எங்க இடம்பெயர்ந்து போறது என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை... இரண்டு இயக்கப் பொடியள் வந்து வீட்டைக் கழட்டி வீட்டுச் சாமானுகளை எல்லாம் ரக்டரிலை ஏத்திவிட முரசுமோட்டைக்குப் போனம். அங்கையும் கன நாளில்லை. ஒருமாதந்தான் இருந்தனாங்கள். ஒருநாள் முரசு மோட்டைச் சந்தியிலை இருக்கிற செல்லையா கடைக்கு மேலை கிபிர், குண்டுகளை கொண்டு வந்து கொட்டிச்சுது. சனங்கள் எல்லாம் துடிதுடிச்சு சிதறிச் செத்துதுகள்.

அந்த இடமே இரத்த வெள்ளம்!

ஒரு பின்னேரம். இனி இஞ்சை இருக்க ஏலாது வெளிக்கிடுங்கோ எண்டு இசைப்பிரியன் வந்து சொன்னான். ருக்குமணி அவனைத் தேடிக்கொண்டு திரிஞ்சவள். உன்ரை அம்மா தேடினவள் எண்டு சொல்லுவமெண்டு பாக்க அவன் ட்ரக்கிலை ஏறி பரந்தன் பக்கமாய் போயிட்டான். கிளிநொச்சிப் பக்கம் பெரிய சண்டை நடக்கப் போகுது எண்டு விளங்கிச்சுது. 


அண்டைக்கு இரவோடு இரவாய் தர்மபுரத்திற்கு இடம்பெயர்ந்தம். நெத்தலியாற்றுப் பிள்ளையாரின் அருளாலையோ என்னவோ அந்தக் கோயிலின்டை தாழ்வாரத்திலை மூண்டு மாதங்கள் இருந்தம்...

ஆனால் பிறகு எறிகணையள் அந்த இடத்தையும் விட்டுவைக்கேல்லை. அங்கயிருந்தும் துரத்தினாங்கள். செல் வந்து விழேக்கையெல்லாம் பிள்ளையார் கோயிலுக்குள்ளை இருப்பம். பிறகு பிள்ளையாருக்கு மேலையும் செல் வந்து விழுத் துவங்கிச்சுது. வானத்தை நிமிர்ந்து பாத்தால் கிபீர் விமானங்கள். அங்கயிருந்தும் இடம் பெயர்ந்தம்...

முறிகண்டியானே! இது என்ன சோதனை? துடிச்சுப்போனம்…

தர்மபுரத்திலையிருந்து சுதந்திரபுரத்துக்குப் போனம். தர்மபுரத்திலிருந்து சுதந்திரபுரத்திற்கு சைக்கிளிலை போனாலும் அரை மணித்தியாலமே கூட. ஆனால் நாங்கள் போய்ச்சேர ஒருநாள் ஆகிட்டுது. ஒவ்வொரு அடியாக வைச்சுவைச்சு நடந்தம். அப்பிடி சனநெரிசல். வானத்திலை கிபீர். செல்லுகள் பக்கத்திலை வந்து விழுகுது. எத்தனையோ பேர் ஒருத்தரை ஒருத்தர் தவறவிட்டிட்டு தேடித் துடிச்சுதுகள். பசி ஒருபக்கம். குடிக்க தண்ணிகூட இல்லை. நடக்கவும் முடியேல்லை. ஆனால் ஆமி கலைச்சுக் கலைச்சு செல் அடிச்சுக்கொண்டே இருந்தான்..”

தொடர்ந்து பேச முடியாமல் கத்தியழுதாள் அம்மா.

“என்னாலை அதுக்குள்ளை ஒரு அடிகூட எடுத்து வைச்சு நடக்க முடியேல்லை அண்ணா” கண்களை துடைத்து, தொடர்ந்தாள் தங்கச்சி. 

“சுதந்திரபுரத்திலை இருந்த நாட்கள் முழுதும் பங்கரிலைதான் எங்கடை வாழ்க்கை. வெளியிலை தலைகாட்ட ஏலாது. ஒரு கிழமைக்கும் மேலை தொடர்ந்து பங்கருக்குள்ளையே இருந்தம். வானத்தைப் பார்க்கேல்லை. இரவு, பகல் தெரியாது. ஒரு பக்கம் இடப்பெயர்வு. மற்றப் பக்கம் சனம் செத்து விழுகுதுகள். ஆர் செத்தது? ஆர் இருக்கிறது எண்டு தெரியாது..

சனங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகுதுகள். பங்கர் எல்லாம் சவக்குழி ஆகிட்டுது. அந்த மரணக் குழியளிலை பதுங்கிடந்தம். ஒரு தறப்பாள் கொட்டில்தான் கொஸ்பிட்டல். அங்கை ஈழப்பிரியன் அண்ணாதான் காயப்பட்ட சனங்களுக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்தார். 

சண்டை நிண்ட பாடில்லை…

நல்ல நினைவிருக்குது. அண்டைக்கு மாசி நாலாம் திகதி 2009ஆம் ஆண்டு. அண்டைக்குத்தான் இலங்கையின்டை சுதந்திரதினமாம். வழமையைவிட அண்டைக்குத்தான் செல்லடி கூடவாயிருந்தது. அண்டைக்குத்தான் நிறையச் சனங்கள் கொல்லப்பட்டதுகள். 

அப்பிடிக் குண்டு மழை பொழிஞ்சாங்கள் அண்ணா...

அண்டைக்குத்தான் ஜீவா அண்ணையும் அவரின்டை மனுசியும் மூண்டுபிள்ளைகளும் ஒரு செல்லிலை ஒரு நொடியிலை அந்த இடத்திலையே செத்தவை. விமலன் அண்ணை காயப்பட்டு இரத்தம் கொட்டக் கொட்ட இரண்டு பிள்ளையளை தூக்கிக்கொண்டு ஓடினார். கிளி அக்கா எங்களுக்குப் பக்கத்தில் பங்கரை விட்டு வெளியிலை வந்து கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தவா.. ஒரு செல் வந்து அவாவுக்கு மேலை விழுந்துது. அந்த பங்கர், எங்கடை பங்கர் எல்லாம் சதையும் இரத்தமும். அவான்டை பிள்ளையள் துடிச்சுதுகள். அப்பிடி எத்தினை பேர் சாகிறதை இந்தக் கண்ணாலை பாத்தனான் அண்ணா?

மறக்க ஏலாத கொடுமையள் அண்ணா!

பசிச்சழுத பிள்ளையளுக்காக ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தவையளும் குழந்தைகளுக்கு பால் ஊட்டிக் கொண்டிருந்தவையளும் எண்டு எத்தனை பேர் செத்திச்சினம்? எப்ப சாவுவரும்? அடுத்து ஆர் சாகிறது எண்டு தெரியாத வாழ்க்கை. எப்ப குண்டு வரும்? எங்கயிருந்து குண்டு வரும் எண்டு தெரியாத நிலைமை.

செத்தவையளை அடக்கம் பண்ண ஆளில்லை. குறை உயிரிலை துடிக்கிற ஆக்களை தூக்கி மருந்து காட்ட ஆளில்லை. 

அப்பயெல்லாம் உன்ரை குரலைக் கேக்க உன்னைப் பாக்க ஏங்குவம் அண்ணா… உனக்கு வந்து போன் எடுக்கவும் ஏலாத மாதிரி செல்லடி.. இடைகிடை குனிஞ்சு வேலிக் கரையோரமாய் நடந்து கொமினிக்கேசனுக்கு வந்து அம்மா கோல் எடுக்கிறவா.. அம்மா பத்திரமாய் திரும்புவாவோ எண்டு பங்கருக்குள்ளை கிடந்து துடிப்பன்… 

அப்ப அங்க சரியான பனி. தாங்க ஏலாத குளிர். ஒரு நாள் அங்க இருந்தும் இடம்பெயர்ந்து வந்து சேரும்போது எனக்கும் அம்மாவுக்கும் வருத்தமும் வந்திட்டுது. எங்களை மாதிரி கனபேருக்கு வருத்தம். அதுக்குள்ளை எங்கை மருந்துக்குப் போறது? சுதந்திரபுரத்திலையும் இருக்க முடியேல்லை. பிறகு இரணைப்பாலையிலை மூண்டு நாள்தான் இருந்திருப்போம். 

அங்கையும் எங்களை இருக்க விட்டாங்களே?...

இரணைப்பாலையை விட்டு இரட்டைவாய்க்காலுக்கு வந்தம். இரட்டைவாய்க்கால் கடற்கரை முழுதும் இடம்பெயர்ந்த சனங்கள். அங்கையும் ஒருமாதம் தான் இருந்திருப்பம். பிறகு வலைஞர்மடத்துக்கு வந்தம். ஒரு இடத்திலை ஒரு பொழுதுகூட தங்கமுடியேல்லை. துரத்தித் துரத்தி செல்லடி. பாதுகாப்பு வலயங்களுக்குள்ளைத்தான் கூடச் செல்லடி. அதுக்குள்ளை போன திருவிழியின்டை குடும்பமே இல்லை... பரிதிநிலா சரியான காயத்தோடையும் சண்டையிலை நிண்டவள். அவள் வீரச்சாவு எண்டு அறிஞ்சு துடிச்சம். வித்துடலைத் தேடி அவளின்டை அம்மா செல்லுகளுக்கு இடையாலை ஊந்து ஊந்து அலைஞ்சதை எப்பிடி மறப்பம் அண்ணா? ஆனந்தி அக்கா ஒரு பக்கம் மனுசனை தேடித் திரிஞ்சா…

வலைஞர் மடத்தில் பார்த்ததுகளை என்னாலை ஒருக்காலும் மறக்க ஏலாது. எங்கை பாத்தாலும் சாவும் சடலங்களும்தான். ஒரே இரத்த வாடை. வலைஞர்மட ஆஸ்பத்திரி முழுக்க காயப்பட்ட ஆக்கள். காயங்கள் எல்லாம் நாறி மணக்க வெளிக்கிட்டுட்டுது. மருத்துவமனை காணிமுழுக்க செத்த சனங்கள்தான். ஒண்டுக்கு மேலை ஒண்டாய் அடுக்கிக்கிடந்தது. அய்யோ அது மருத்துவமனையா சவச்சாலையா எண்டு தெரியேல்லை... மருத்துவப் போராளியள் மருந்தில்லாமல் வெறும் துணியலை கிழிச்சுக் கிழிச்சு காயங்களுக்குக் கட்ட, இரத்தம் நிக்காமல் கொட்டிச்சுது.. அநாதையாய் செத்துக் கிடந்தா தவமணி அக்கா. செந்தூரனும் கடைசியலை இயக்கத்துக்குப் போட்டான். 

இரத்தினம் அண்ணையும் சண்டையிலை நிண்டு உதவியள் செய்தார். இரண்டு பேரும் வீரச்சாவு.

ஆருக்கு சாவு வரும்? யார் தப்புவினம் எண்டெல்லாம் ஆருக்கும் தெரியாது. உயிரை கையிலை பிடிச்சுக் கொண்டிருந்தம். எல்லாமே எல்லாருமே சாவுக்கு முன்னாலைதான்.. வலைஞர் மடத்திலையிருந்து கடைசியாய் முள்ளிவாய்க்காலுக்கு வந்தம். இதுவரைக்கும் சந்திச்சதைவிட சரியான துன்பங்கள்.. எங்கை பாத்தாலும் செத்த பிணங்கள்.. கால் வைக்கிற இடமெல்லாம் இரத்தம். தூக்கவும் பாக்கவும் அழவும் ஆக்களில்லை.. செத்தவையளை மணலாலை போட்டு சிலர் மூடிச்சினம். பெத்த தாயை இழந்து தனியா அழுகிற குழந்தை.. செத்துப்போன குழந்தையளை பாத்து துடிக்கிற தாய்.. உடம்பிலை காய் கால் இல்லாமல் துடிக்கிறவையள்… 

பிணங்களை விட்டிட்டு போக ஏலாமல் கத்திற சனங்கள்.. எல்லாருக்கு மேலையும் திரும்பவும் குண்டுகள்தான்.. எல்லாரையும் திரும்பத் திரும்ப துப்பாக்கிச் சன்னங்கள் வந்து தாக்கிச்சுது… ஊழித்தீயாய் சண்டை. ஈழப்பிரியன் வீரச்சாவடைஞ்சு அவனின்டை வித்துடலை இரண்டு இயக்க அண்ணமார் முள்ளிவாய்க்கால் மணலிலை விதைச்சினம். 

முள்ளிவாய்க்காலே பிண வாய்க்கால் ஆகிட்டுது. சண்டை பிடிச்சு வீரச்சாவடைஞ்ச ஒரு இயக்க அண்ணை துவக்கை இறுக்கிப் பிடிச்சபடி கிடந்தார். எங்களுக்கு கிட்ட ஆமி வந்திட்டான். கனக்கப் பிணங்களைத் தாண்டி வந்துதான் ஆமிட்டை சரணடைஞ்சம். பிணங்கள் மிதக்க இரத்தக் கடலாய்ப் போன நந்திக்கடலுக்குள்ளாலைதான் ஆமிட்டை சரணடைஞ்சம். இயக்கத்தின்டை ஆயுதங்களை கைப்பற்றின மாதிரியும் ஏதோ அடிமையளை பிடிச்ச மாதிரியும் ஆமி எங்களை கொண்டு போனாங்கள்… எங்களோடை வந்த ஞானம் அண்ணையையும் அவரின்டை மனுசி பிள்ளையளையும் இயக்கமெண்டு, ஆமி வேற பக்கமாய் கூட்டிக்கொண்டு போனான்.. போட்டிருந்த உடுப்பைவிட ஒண்டும் இல்லை. வெறும் கையோடை வந்தம்.” 

தங்கச்சி சொல்லி முடிக்கையில் வானம் கவிழ்ந்து போயிற்று.

வெள்ளி, 10 மே, 2019

வீடு திரும்புதல்! முதன் முதலாக


2000ஆமாம் ஆண்டு. அப்போது இடம்பெயர்ந்து கந்தபுரம் என்ற ஊரில் வசித்துக் கொண்டிருந்தோம். போர்க்களத்தில் போராளிகளுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கிராமமாக மக்கள் செல்வது வழக்கமானது. பதுங்குகுழியமைத்தல், உணவு சமைத்தல் போன்ற உதவிகள் ஒத்தாசைகளை செய்வதற்காக செல்லுவதுண்டு. அப்படிச் செல்பவர்கள் சண்டைகளில் சிக்கி இறப்பதும் உண்டு. பின்னர் அவர்கள் எல்லைப் படை வீரர்களாக புலிகளால் கௌரவிக்கப்படுவார்கள். அப்போது எங்கள் ஊரில் இருந்தும் பலர் போர்க்களத்திற்குப் புறப்பட்டார்கள். எனக்கு அப்போது 17 வயது. இதனால் அனுமதி மறுக்கப்பட்டது. நானும் என்னுடைய நண்பன் ஒருவனும் எப்படியோ அந்தக் குழுவில் புகுந்து கொண்டு லாரிக்குள் ஏறிக்கொண்டோம்.

எனது சகோதரன் இயக்கத்தில் இருப்பதால் அவனை பார்க்கலாம் என்பதற்காகவுமே புறப்பட்டேன். அப்போது, ஆனையிறவை புலிகள் இயக்கம் கைப்பற்ற தயாராகியிருந்த நாட்கள். பூநகரி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தது. பூநகரியின் கௌதாரி முனை என்ற பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய முகாங்கள் இருந்தன. கௌதாரிமுனை மிகுந்த முக்கியமான மையமாக செயற்பட்டது. அங்கு சண்டைகள் மூழ்வதுடன், யாழ்ப்பாணத்தில் இருந்தும் இராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதுண்டு. என்றாலும் கௌதாரி முனை ஊடாக புலிகள் யாழ்ப்பாணத்திற்கும் இரகசியமாக ஊடுருவி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.

கந்தபுரத்திலிருந்து புறப்பட்ட, மக்களை ஏற்றிய லாறி, பூநகரி நோக்கி விரைந்தது. பூநகரி மக்கள் யாருமற்ற பாழடைந்து காணப்பட்டது. பழமையான அந்த நகரத்தின் கடைத்தெருக்கள் எல்லாம் பற்றை மண்டியிருந்தது. எங்கு பார்த்தாலும் உருக்குலைந்த மண்மேடுகளும் இராணுவமுகாங்களுமாய் ஆளரவமற்றிருந்தது. நெடுங்காலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து 1993இல் புலிகளால் கைப்பற்றப்பட்டபோதும், 1996 கிளிநொச்சியின் இராணுவத்திடம் வீழ்ந்த பின்னரும்  யாழ்ப்பாணம், ஆனையிறவில் நிலை கொண்ட இராணுவத்தினரால்  அங்கு மக்கள் வாழமுடியாத நிலை நீடித்தது. 

அங்கு நேற்றும் கடுமையான சண்டை மூண்டதென லாறியில் இருப்பவர்கள் பேசிக்கொண்டனர். அண்ணா, அங்கே நிற்கக்கூடும், அல்லது அவனை பற்றிய தகவல்கள் எதையாவது பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். போராளிகள், எல்லைகளில் காவல் இருந்தனர். போராளிகளின் முன்னரங்குகளும் தெரிந்தன. எதிர்திசையில் இராணுவத்தினரின் காவலரண்களும் நடமாட்டங்களும் தெரியும். திடீரென விமானங்கள் வந்து தாக்கும். இராணுவத்தினரின் படகுகள் கடல் வழியில் தென்படும். போராளிகள் கரையிலிருந்து தாக்குவார்கள். போராளிகளின் படகுகள் கடலுக்குள் சென்று இராணுவத்தை தாக்கும்.

என்ன நடக்கப் போகிறதே என்ற அச்சம். “பாடியாய்தான் வீட்ட போகப் போறம்..” என்று என் நண்பன் ஒருபுறம் கிலியை ஏற்றுவான். அம்மா, தங்கச்சி எல்லோரையும் நினைக்க திரும்ப போய்விடலாம், பொறுப்பாளரிடம் சொல்லிவிடலாம் என்றும் தோன்றியது. போராளிகளின் சிரிப்புச் சத்தம் போர்க்களத்தை கலகலப்பாககியது. ஒருவரை ஒருவர் கிண்டலடித்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டும் இருந்தனர். போர்க்களத்தின் நெருக்கடிகளைக்கூட மகிழ்ச்சியாக அனுபவித்துப் பேசும் அவர்களைப் பார்க்கையில், எனக்குள் இருந்த பயம் கொஞ்சம் தணிந்தது. அண்ணாவை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அதிகரித்தது.

கடுமையான சண்டைக்குள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, மீன்களை அள்ளி வந்து போராளிகளுக்கு கொடுக்கும் மீனவர்களிடமும் அண்ணாவை கண்டீர்களா என்றும் விசாரித்தேன். நானும் எனது நண்பனும் போராளிகளுக்கு சமைத்த உணவுகளை எடுத்துச் சென்று கொடுப்பதுண்டு. போராளிகள், “தம்பிக்கு எத்தினை வயது” என்று கேட்கவும், 18 முடிந்துவிட்டது என்றேன். அவர்கள் என் பதிலில் நம்பிக்கையின்றிப் பார்த்தனர். எங்களுடன் வந்தவர்கள் மண்மலைகளை அண்டிய பிரதேசங்களில் பதுங்குகுழிகளை அமைத்தார்கள். அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை செய்வதுமாய் நகர்ந்தன நாட்கள். கிடடத்தட்ட ஒரு வாரம் கழிந்துவிட்டது.

ஒரு நாள் நானும் என்னுடைய நண்பனும் பதுங்குகுழி அமைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உணவை எடுத்து சென்று கொண்டிருந்தோம். அன்று பாரிய சமருக்கு இராணுவம் தயாராகிக் கொண்டிருந்தது. மண் மலைகளிலிருந்து கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்க, வானத்தில், விமானங்கள் வந்து குவியத் தொடங்கின. வெட்டை வெளியான அந்தப் பகுதியில் ஒரு பதுங்குகுழியும் இல்லை. எங்கு பதுங்குவது என்று தெரியாது நானும் அவனும் ஒடினோம். போராளிகள் உடற்கரைகளிலும் மண் மலைகளிலும் போராளிகள் உசாராகிக் கொண்டிருந்தனர். மற்றொரு புறத்தில் யாழ்ப்பாணக் கரைகளிலிருந்து செல்கள் வந்து விழத் தொடங்கின. நானும் எனது நண்பனும் தூர்ந்துபோன கிணறு ஒன்றுக்குள் குதித்தோம்.

வான்வழியாகவும் தரைவழியாகவும் கடும் தாக்குதலை நடத்தியது இராணுவம். போராளிகள் பதிலுக்கு யாழ்ப்பாணம் நோக்கி, கடல் வழியாக பீரங்கிக் தாக்குதலை நடத்தினார்கள். போராளிகளின் நகர்வுகளும் வானங்களின் நகர்வுகளும் நிறுத்தப்படவில்லை. விமானங்கள் குண்டுகளை கொட்டி அந்த இடத்தையே சின்னா பின்னாக்கியிருந்தது. காயப்பட்ட போராளிகள் மணல்மலை முகாங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். இரண்டு போராளிகள் வந்து அந்தக் கிணற்றிலிருந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் உயிரோடுதான் இருக்கிறேனா என்று யோசித்தேன். நான் நன்றாகவே பயத்தில் அதிர்ந்து போனேன். வார்த்தை ஒன்றும் வாயில் வரவில்லை. எனது நண்பன் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். மணல்மலைகளில் சுற்றித் திரிவதை நிறுத்திவிட்டு, பாசறையின் அறை ஒன்றுக்குள் பேசாமல் படுத்திருந்தேன்.


கிராமங்களிலிருந்து மக்களை அழைத்து வரும் செயற்பாடுகளுக்கான போராளிப் பொறுப்பாளர் பாசறை வந்ததும் என்னையும் என் நண்பனையும் கண்டு அதிர்ந்துபோனார். “ஆர் இவர்களை அழைத்து வந்தது” என்று பேசிக் கொண்டிருந்தார். எந்தப் பாடசாலையில் கல்வி கற்கிறீர்கள், எத்தனையாம் வகுப்பு என்று கேட்டார். நான் அண்ணாவை தேடி வந்ததைப் பற்றி சொன்னேன். உடனேயே எங்களை தன்னுடைய ட்ரக்கில் ஏற்றிக் கொண்டார். அண்ணா பற்றிய விபரங்களை பெற்றுக்கொண்டார். விரைவில் அண்ணாவை விடுமுறையில் வீட்டுக்கு அனுப்புவதாகவும் சொன்னார். நாளையே பாடசாலை போகவேண்டும் என்றும் பாடசாலைக்கு வந்ததை உறுதிப்படுத்த வகுப்பாசிரியரின் கையப்பத்துடன் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் என்றும் சொல்லி வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார் அந்தப் போராளி. வெகு நாட்கள் அண்ணாவுக்காக காத்திருக்க, ஒருமுறை விடுமுறையில் வீடு வந்தான். அதன் பிறகு, வீரமரணம் அடைந்து வித்துடலாய்தான் வீடு திரும்பியிருந்தான். 

நன்றி - விகடன் தடம்